வட இந்தியாவின் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மலைக் கோட்டை விநயாகர் இவர்!

Update: 2023-03-05 00:15 GMT

ராஜஸ்தானில் இருக்கும் ஜெய்ப்பூரில் அமைந்துள்ளது மோதி துங்கரி மலை. இங்கு அமைந்துள்ள விநாயகர் கோவிலின் பெயர் மோதி துங்கரி கணேசா கோவில். ஜெய்ப்பூரின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களுள் ஒன்றாக இந்த இடம் திகழ்கிறது. மோதி துங்கரி என்றால் முத்துபரல்களால் ஆன மலை என மொழிபெயர்க்கலாம். அம்மலையின் மிளிர்வான தோற்றமும், முத்துத் துளிப்போல இருக்கும் அமைப்பும் இந்த பெயருக்கான காரணம் என சொல்கின்றனர்.

இங்கு அமைந்துள்ள இந்த கணேசா கோவிலை சேத் ஜெய் ராம் பலிவால் என்பவரின் மேற்பார்வையில் 1761 ஆம் ஆண்டில் கட்டியுள்ளனர். இந்த கோவில் குறித்து சொல்லப்படும் வரலாற்று கதை யாதெனில், மேவாரின் அரசர் ஒரு பிரமாண்ட விநாயகர் சிலையை மாட்டு வண்டியில் வைத்து பயணித்து கொண்டிருந்தார். இந்த வண்டி எங்கே ஓய்ந்து நிற்கிறதோ அங்கே இந்த திருவுருவத்தை நிறுவ வேண்டும் என அவர் நினைத்தார். அதன் படி அந்த மாட்டு வண்டி ஓய்ந்து நின்ற இடம் தான் மோதி துங்கரி மலை அடிவாரம். அதன் பின் அங்கேயே அந்த விநாயகர் சிலை நிறுவப்பட்டது.

மேலும் இந்த மலையின் உச்சியில் மிக அழகான ஒரு கோட்டை ஒன்று உண்டு பார்ப்பதற்கு ஸ்காட்டிஷ் நாட்டு கோட்டையை போல இருக்கும் அத அமைவிடம் ஒரு காலத்தில் மஹாராஜா சாவாய் மன் சின் என்பவர் வசம் இருந்தது. இன்றும் இந்த கோட்டை ஜெய்ப்பூர் ராஜ பரம்பரையை சேர்ந்தவர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கணேசரின் தனித்துவம் என்னவெனில் முழுமையும் செந்தூர வண்ணத்தால் ஆனவர் இவர். ஏதேனும் புனித நாட்களில் திருவுருவத்திற்கு பாலினால் அபிஷேகம் செய்கின்றனர். இந்த கோவிலில் இருக்கும் விநாயகரின் திருவுருவம் 500 ஆண்டுகள் பழமையானது. வலது புறம் நோக்கி இருக்கிறது இந்த கணேசரின் துதிக்கை. இங்கு விநாயகருக்கு லட்டு பிரசாதம் சாற்றி மக்கள் வழிபடுகின்றனர். ஒரு வருடத்திற்கு 1.25 இலட்சத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் இந்த கோவிலுக்கு வருகை தருகின்றன்னர். இந்த கோட்டை வளாகத்தினுள் சிவனுக்கான கோவிலும் உண்டு. அந்த கோவில் வருடத்தில் ஒரே ஒரு நாளான சிவராத்திரியில் மட்டுமே நடை திறக்கப்படுகிறது. விநாயகருக்கு மிகவும் உகந்த நாளான புதன் கிழமைகளில், இந்த கோட்டை வளாகத்தினுள் சிறிய அளவிலான கண்காட்சியும்  ஒருங்கிணைக்கப்படுகின்றது.

Tags:    

Similar News