துன்பத்தில் வாடும் மக்களை துயரிலிருந்து மீட்டெடுத்து வன தேவதையாக வாழும் செருவாவிடுதி போத்தி அம்மன்!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த திருச்சிற்றம்பலம் அருகே உள்ளது செருவாவிடுதி இந்த ஊரில் வனத தேவதையாக அருள்பாலிக்கிறாள் செருவா விடுதி போத்தியம்மன்.

Update: 2023-12-22 01:15 GMT

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த திருச்சிற்றம்பலம் அருகே உள்ளது செருவாவிடுதி. இந்த ஊரின் தெற்கு பகுதியில் தமிழக அரசின் வனத்துறைக்கு சொந்தமான சூழலியல் பண்ணை காப்புக்காடு அமைந்துள்ளது. இந்த காட்டின் நடுநாயகியாக இருந்து ஆரம்பகாலம் முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அம்மனின் பெயர் 'போற்றி அம்மன்'. காலப்போக்கில் இந்த பெயர் மறுவி 'போத்தி அம்மன்' என பக்தர்களால் அழைக்கப்படுகிறது. ஆரம்ப காலத்தில் கட்டப்பட்ட எளிமையான ஓட்டு கட்டிடத்திலேயே தற்போதும் இந்த கோவில் அமைந்துள்ளது.


போத்தி அம்மன் சுயமாக ஆதாரம் பெற்று பக்தர்களால் தொடர்ந்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செல்லும் சாலையில் உள்ளது செருவாவிடுதி. இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம், பஸ் நிறுத்தத்தில் அமைந்துள்ள கோவிலின் தோரணவாசல் கோவிலை சென்றடைய பக்தர்களுக்கு வழிகாட்டுகிறது. நான்கு பக்கமும் காடுகள், அமைதியான சூழல் பல்வேறு உயிரினங்கள் இக்காட்டில் கொஞ்சி குலாவும் அழகு மனதிற்கு அமைதி ஏற்படும் இயற்கை சூழலில் இக்கோவில் அமைந்துள்ளது தனி சிறப்பு.


அடர்ந்த  செடி கொடிகள் வளர்ந்துள்ள காப்பு காட்டில் பாம்பு உள்ளிட்ட பல்வேறு விஷ உயிரினங்கள் இருப்பினும் அம்மனின் அருள் சக்தியினால் இதுவரை இந்த கோவிலில் விஷ பூச்சிகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்று எவருமே இல்லை என்பது தான் அம்மனின் அருள் சக்திக்கு எடுத்துக்காட்டாகும். இந்த கோவிலின் அருகில் செருவாவிடுதி ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பிரசவத்திற்கும்,பிற நோய்களுடன் வருபவர்களும் அம்மனை வணங்கி திருநீறு அணிந்த பின்பே சுகாதார நிலையத்திற்குள் செல்கின்றனர்.


இவ்வாறு அம்மனை வணங்கி விட்டு செல்லும் தாய்மார்களுக்கு சுகப்பிரசவம் நிச்சயம் . இதனால் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு போத்தியப்பன், போத்தி அம்பாள் போத்தி அம்மன் என பக்தர்கள் பெயரிட்டு அழைக்கின்றனர். இதிலிருந்து அம்மனின் அருள் சக்தி அகிலமும் பறைசாற்றும். இதனால் தானோ என்னவோ செருவாவிடுதியில் போத்திஅம்மன் போத்தியப்பன் என்ற பெயர்களை கொண்டவர்கள் அதிகம் காணப்படுகின்றனர்.


போத்தியமனை அனைவரும் வணங்குகின்றனர். அம்மன் கோவிலில் நடக்கும் பௌர்ணமி சிறப்பு வழிபாடு உள்ள அனைத்து வழிபாடுகளும் இந்த கோவிலில் நடந்து வருகிறது. திருச்சிற்றம்பலம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் போத்தியம்மனை மனமுருகி வணங்குவதன் மூலம் தங்களது குறைகள் நிவர்த்தி செய்யப்படுவதாக பலனன் அடைந்த பக்தர்கள் கூறுகின்றனர். பௌர்ணமி தினத்திலும் வெள்ளிக்கிழமை அன்றும் இந்த கோவிலில் முடிகயிறு  கட்டப்படுகிறது. இவ்வாறு கட்டப்படும் கயிறு மூலம் தங்களது காரிய தடைகள் விலகுவதாகவும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அம்மனை வழிபடுவதன் மூலம் குழந்தை பேறு கிடைப்பதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர் .


அம்மனை வேண்டி முடிகாணிக்கை செலுத்துபவர்கள் இங்கு ஏராளமாக வருகின்றனர் . பக்தர்கள் தங்களது திருமண நாள் ,பிறந்த நாள், மூதாதையர்களின் நினைவு நாள் ஆகிய தினங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கு வசதியாக அன்னதான கூடமும் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையே அம்மனின் அருளுக்கு சாட்சியாக உள்ளது.



Similar News