இன்று ஆடி அமாவாசை! எந்த அமாவாசைக்கும் இல்லாத பெருமை ஆடி அமாவாசைக்கு ஏன்?

Update: 2022-07-28 02:03 GMT

ஆடி அமாவாசை என்பது தமிழ் மாதமாம் ஆடி மாதத்தில் வருகிற அமாவாசையாகும். தமிழ் இந்துக்களுக்கு தமிழ் மாதத்தின் நான்காம் மாதமாம் ஆடி மாதம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி போன்ற பல பண்டிகைகள் இந்த மாதத்தில் கொண்டாடப்படுகின்றன. அந்த வகையில் இந்த வருடத்தின் ஆடி அமாவாசை நாளை கொண்டாடப்படுகிறது. இதற்கான திதி நேற்று இரவு 9:11 மணி முதல் தொடங்கியுள்ளது.

நேற்று தொடங்கிய இந்த திதி இன்று காலை 11:24 வரை நீடிக்கிறது. 28 ஆம் தேதியில் சூரியன் உதிப்பதால் ஆடி அமாவாசை என்பது 28 ஆம் தேதி தான் என்பது உறுதியாகிறது.

எத்தனையோ அமாவாசைகளில் ஆடி அமாவாசை என்பது ஏன் இத்தனை முக்கியத்துவம் பெருகிறது? இதற்கு பல விதமான காரணம் சொல்லப்படுவதுண்டு. முருகனுக்கு உகந்த நாள் என்ற கூற்றும் உண்டு, இதனை உறுதிப்படுத்தும் வகையில் முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகை மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவதுண்டு.

அதுமட்டுமின்றி இந்நாளின் தனிச்சிறப்பென்பது பித்ருக்களுக்கு செலுத்த வேண்டிய மரியாதையை செலுத்துவதாகும். இந்த நாளில் அவரவர் வீட்டில் மறைந்த முன்னோர்களை எண்ணி வணங்கி அவர்களுக்கு படையலிடுவது வழக்கம். அதுமட்டுமின்றி ஆடி அமாவாசை நாளில் புனித நதிகளாம் ராமேஸ்வரத்தின் அக்னி தீர்த்தம், கன்னியாகுமரியின் திருவேணி சங்கமம் போன்ற இடங்களில் புனித நீராடுவதும் வழக்கம்.

இந்த நாளில் விரதம் இருந்து வழிபடுவதால் ஒருவர் முருகனின் அருளை பரிபூரணமாக பெற முடியும். அதுமட்டுமின்றி நமது முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய சடங்குகளை இந்த நாளில் செய்வத மூலம் பித்ரு தோஷம் நீங்குவதுடன் வீட்டிலுள்ள குறைகள் தீர்ந்து மகிழ்ச்சி பொங்கும் என்பது நம்பிக்கை. ஆடி மாதத்தில் இறைவனின் அருள் இந்த பூமிக்கு முழுமையாக கிடைப்பதாக சாஸ்திரம் சொல்கிறது. இந்த மாதத்தில் சூரியன் தெற்கை நோக்கி நகரும் தக்‌ஷிணாயனம் தொடங்குவதாலும், ஆடி அமாவாசையே தக்‌ஷிணாயத்தின் முதல் அமாவாசை என்பதால் இந்த அமாவாசைக்கு இத்தனை சிறப்பு.

எனவே இந்த நன்நாளில் புனித நீராடி, தர்ப்பண பூஜை முடித்து விரதமிருந்து படையலிட்டு பின் உண்பதால் நம் முன்னோர்களின் அருளை நாம் பெற முடியும் மற்றும் அவர்களின் கர்ம வினைகளை தீர்க நாம் உதவ முடியும்.

Tags:    

Similar News