ஆடி மாதம் என்பது தமிழ் மாதங்களில் நான்காவதாக வரும் மாதமாகும். ஆடி மாதத்திற்கு அடுத்து மார்கழி வரை வரும் மாதங்களை தக்ஷிணாயன புண்யகாலம் என்றழைப்பது மரபு. புராண ரீதியாக தேவர்களின் இரவு காலம் தொடங்குகிறது என்று சொல்வர்.
எனவே ஆடி மாதம் என்பது இந்து தமிழர்களுக்கு மிகவும் சிறப்பான மாதமாகவே கருதப்படுகிறது. ஆடிப்பெருக்கு, ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை, ஆடி பூரம், நாக பஞ்சமி, வரலட்சுமி விரதம் போன்ற பண்டிகைகள் இந்த மாதத்தில் கொண்டாடப்படுவதால் இந்த மாதத்தின் பெரும்பாலான நாட்கள் பண்டிகைகளாகவே இருப்பது சிறப்பு.
அதிலும் குறிப்பாக ஆடி மாதத்தில் முருக வழிபாடும், சக்தி வழிபாடும் மிகுந்த விஷேசமானவை. ஆடி மாதத்தில் வருகிற வெள்ளி கிழமைகளில் அம்மனை வழிபடுவது மரபாகவே இருந்து வருகிறது. பெரும்பாலும் 4 வெள்ளிகள் ஆடியில் வருவதுண்டு, அது போன்ற வேளையில் விரதத்தை ஒற்றை படையில் முடிக்க வேண்டும் என்பதற்காக முந்தைய மாதமாம் ஆனியில் வரும் கடைசி வெள்ளி முதலே விரதம் இருக்கும் பழக்கமும் பரவலாக உண்டு.
சில ஆண்டுகளில் ஆடியிலேயே ஐந்து வெள்ளியும் வருவதுண்டு. எதற்காக இந்த ஐந்து வெள்ளி வழிபாடு என்றால், முதலாம் ஆடியில் பார்வதியின் சொரூபமான ஸ்வர்ணாம்பிகைக்கு வழிபாடு நடக்கிறது. இரண்டாம் ஆடி வெள்ளியில் காளிக்கு வழிபாடு நடக்குகிறது, காளியை வணங்குவதால் ஒருவர் நிறைந்த அறிவை பெறுவார்
மூன்றாம் வெள்ளியன்று காளிகாம்பாளுக்கு வழிபாடு நடைபெறுகிறது. இவள் மனோ தைரியத்தையும் உடல் பலத்தையும் கொடுப்பார். நான்காம் வெள்ளியன்று காமாட்சிக்கு வழிபாடு நடக்கிறது. காளிகாம்பாள வணங்குவதால் திருமண தடை, உறவு சிக்கல் தீரும் என்பது நம்பிக்கை.
ஐந்தாம் ஆடி வெள்ளியன்று இலட்சுமிக்கு பூஜை செய்வது வழக்கம். இதைதான் நாம் வரலட்சுமி விரதம் என கடைப்பிடிக்கிறோம் வரலட்சுமி விரதம் இருப்பதால் வீட்டில் சகல செல்வமும் சேர்ந்து, திருமண பந்தம் நீண்ட நாள் நீடிக்கும்.
இந்த ஆடி வெள்ளியன்று அம்மனை அலங்கரித்து, சக்கரை பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்களை ஏழை எளியோருக்கு வழங்கி மிக விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.