தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பது ஏன்? அதை செய்வதால் நிகழும் அதிசயம்

Update: 2022-02-05 00:55 GMT

அனைத்து உயிர்களுக்கும் சில அடிப்படை விஷயங்கள் உயிர்வாழ தேவையாய் இருக்கிறது. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இந்த மூன்றும் மனிதர்களின் அடிப்படை என்று சொல்லப்படுவதுண்டு. பின்னிரண்டு இல்லாமல் போனால் கூட உயிர் வாழ்தல் கடினம் எனினும், உயிர் வாழ்தல் சாத்தியம் தான். ஆனால் முன்னதான உண்ண உணவு என்பது இல்லாமல் போனால் உயிர் என்பதே நிலை கொண்டு இருக்காது.

அதனால் தான் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்றார்கள். அன்னதானத்தை மஹாதானம் என்றும் அழைப்பதுண்டு. பெரும்பாலான மொழிகளில் இது அன்னதானம் என்றே அழைக்கப்படுகிறது. அன்னம் என்பது உணவை குறிக்கும் சொல். அன்னதானத்தின் சிறப்பை உணர வேண்டுமெனில், மஹாபாரத போரில் கர்ணம் உயிர் பிரியும் தருவாயில் போர்களத்தில் கிருஷ்ணனிடம் இரு வரங்கள் வேண்டினான். தன் உயிர் பிரிந்த உடன் விரைந்து சென்று குந்தியிடம் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் அவள் தன் மகன் என்பதை உலகறிய சொல்வாள். மற்றொரு வரத்தை கர்ணன் இவ்வாறு கேட்டான். "கண்ணா நான் மறுபிறவியில் இருந்து தப்பமாட்டேன் என்பதை அறிவேன். காரணம் நான் அன்னதானம் செய்யவில்லை. அன்னதானம் செய்யாமல் வேறெந்த தானம் செய்தாலும் அது கர்ம வினைகளை அழிக்காது என்பதை நான் அறிவேன். எனவே இனியொரு முறை பிறந்தால், அன்னதானம் செய்யும் குடும்பத்தில் பிறக்க வேண்டும் " என்று வேண்டினான் என ஒரு கிளை கதை சொல்லப்படுவதுண்டு.

பூதானம், கோதானம், வித்யதானம் என இன்னும் பல வகையான தானங்கள் இருந்தாலும் அன்னதானத்தின் முக்கியத்துவத்தை ஒருவர் இதன் மூலம் உணர்ந்து கொள்ள முடியும். காரணம், இந்த தானத்தில் நீங்கள் ஒருவருக்கு தேவையான உயிர்ப்பான விஷயத்தை வழங்க முடியும். அதனால் தான் நம் முன்னோர்கள் பசியை பிணி என்று அழைத்தார்கள். பசிப்பிணி போக்குதல் தலையாய கடமை என்று சொல்லப்பட்டது. அதுமட்டுமின்றி பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பு, ஒருவரின் வயிற்று பசியில் இருக்கிறது. எனவே அந்த அக்னியை உணவை கொண்டு அணைப்பதென்பது, யாக குண்டத்தில் ஆஹூதி இடும் புண்ணியத்திற்கு சமம்.

இன்று பெரும்பாலானோர் அன்னதானம் என்பது மனிதர்களுக்கானது மட்டுமே என்று நினைக்கின்றனர், உண்மையில் அனைத்து விதமான உயிரனங்களுக்கும் நம்மால் சாத்தியப்பட்ட வகையில் நாம் செய்யக்கூடிய அன்னதானம் நம் கர்ம வினைகளை அழிக்க உதவும்.

Tags:    

Similar News