இறை வழிபாட்டில் கற்பூர ஆரத்தி காட்டப்படுவது ஏன்? ஆச்சர்ய பின்னனி

Update: 2023-03-21 00:30 GMT

நம் மரபில் ஏராளமான சடங்குகள், நம்பிக்கைகள் இருக்கின்றன. மேலும் நம் சடங்குகளின் ஓர் அங்கமாக ஏராளமான பொருட்கள் நாம் பயன்படுத்துவது உண்டு. பூஜை, ஆரத்தி, இதர விழாக்களில் நாம் பயன்படுத்தும் பொருட்கள் கணக்கிலடங்காதவை. ஆனால் நாம் பயன்படுத்தும் அனைத்திற்கும் ஒவ்வொரு பயன்பாடும், ஒவ்வொரு ஆழமான பொருளும் உண்டு.

இதில் கற்பூரத்தை பயன்படுத்துவது என்பது ஒரு குறியீடாக, தத்துவார்த்தமாக பயன்படுத்த படுகிறது. மேலும் நம் வேதத்திலும் ஆகம சாஸ்திரத்திலும் தெய்வீக அம்சமாக பார்க்கப்படுகிறது. தத்துவார்த்தமாக பார்த்தால் கற்பூரம் என்பது மனித வாழ்வுடன் தொடர்புடையது. கற்பூரம் எப்படி திடவடிவில் தொடங்கி தன்னை தானே கரைத்து இறுதியில் ஏதுமற்று போகிறதோ அது போல, மனித வாழ்வும் திடமாக இருக்கும் கர்ம வினைகளை உணர்ந்து அழித்து இறுதியில் ஏதுமற்ற நிலையான முக்தியை நோக்கி செல்வதை குறிப்பதாக இருக்கிறது.

கற்பூரத்தை பயன்படுத்த சொல்லப்படும் மற்றொரு காரணம், அதன் நறுமணம் தெய்வீக சூழலை நம்மை சுற்றி ஏற்படுத்தும். எத்தனை இடையூறுகள், சிக்கலான சூழல் நடுவிலும் இப்படியொரு தெய்வீக மணம் கமழும் போது மனம் இயல்பாகவே இறைவனை நோக்கி செல்லும். மேலும் அதில் சூடம் ஏற்றப்படுவதால் அதிலிருந்து வெளிப்படும் தீப ஒளியானது அந்த இடத்தை சுத்திகரிக்கிறது.

பெரும்பாலும் ஆரத்தி சுற்றும் போது வலப்புறமாகவும், இடப்புறமாகவும் சுற்றுவார்கள். இதன் மூலம் ஆரத்தி சுற்றப்படும் இடம் முழுமையாக சுத்திகரிக்கப்படுகிறது. மேலும் அறியாமை எனும் இருளை அகற்றி ஞானம் எனும் ஒளியை கொடுக்கும் குறியீடாகவும் கற்பூரம் பார்க்கப்படுகிறது.

இதில் ஒரு சில கற்பூரம் உண்ணத்தகுந்ததாக இருப்பதை நாம் பார்க்க முடியும். இப்படிப்பட்ட கற்பூரத்தை தீர்த்ததில் கரைத்து தெய்வத்திற்கு அர்ப்பணித்த பின் தீர்த்த பிரசாதமாக வழங்குவார்கள். மேலும் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் பார்த்தால் பச்சை கற்பூரத்தை வீட்டின் வடகிழக்கு மூலையிலும், பணம் வைக்கும் பெட்டகத்திலும் வைக்கிற போது பணப்புழக்கம் கூடும் என்பது நம்பிக்கை.

பச்சைகற்பூரம், சிறிது கிராம்பு இவற்றை வைக்கிற போது வீட்டிலுள்ள எதிர்மறை ஆற்றல் களையப்பட்டு நல்ல நேர்மறை ஆற்றல் பெருகி செல்வ வளம் பெருகும் என்பது பெரும்பாலனவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை.

Tags:    

Similar News