ஆன்மீக மரபில் குருவுக்கு பாதபூஜை செய்வது ஏன்?அதன் முக்கியத்துவம் என்ன?

Update: 2022-01-21 00:30 GMT

வேதமும் புராணமும் சொல்லும் தார்ப்பரியத்தையே நாம் சடங்குகளாக பின் தொடர்ந்து வந்துள்ளோம். அதில் சிலவற்றில் அர்த்தத்தை நாம் பாதியிலேயே தவறவிட்டதால் பொதுவாக ஒரு சில சடங்குகளை மூட நம்பிக்கை என வகைப்படுத்தி விடுகிறோம். உண்மையில் நம் அசைவுகள் அனைத்திற்கும் ஒரு காலத்தில் அர்த்தங்கள் இருந்தன. இன்று போதிய விழிப்புணர்வு இல்லாததே அந்த அர்த்தங்களை நாம் இழந்ததற்கான காரணம்.

அந்த அடிப்படையில் குருமார்களை, மற்றும் மிக முக்கியமான ஆன்மீக விருந்தினர்களை வரவேற்கிற போது பாத பூஜை செய்யும் வழக்கம் நம் மரபில் உண்டு. இது நமது மரியாதையை, வணக்கத்தை நன்றியை செலுத்தும் முறை என்றாலும் இதற்கு பின் சொல்லப்படும் காரணம் என்ன?

ஆன்மீக ரீதியாக சொன்னால் ஒருவரை ஆசிர்வதிப்பது என்பது ஒருவரிடம் இருக்கும் ஆற்றலை இன்னொருவருக்கு பாய்ச்சுவது என்பதே ஆகும். நாம் ஒரு மூத்தோரிடம் ஆசி பெறுகிறோம் எனில் அவரிடம் இருக்கும் ஆற்றலை நாம் சிறிது பெற்ற் கொள்கிறோம். அந்த ஆற்றல் நம் இலக்கை நோக்கி நாம் பயணிக்க உதவி செய்யும். எனவே ஒருவர் தன் அற்றலை கை மற்றும் கால்களின் மூலம் கடத்த முடியும். அதனால் தான் ஆசிர்வாதம் செய்கிற போது ஒருவரின் தலையின் மீது கைகள் படுமாறு ஆசிர்வதிக்கின்றனர். அதன் பொருள் ஆற்றலை வழங்குவதே ஆகும்.

அதுமட்டுமின்றி நமது ஆன்மீகத்தின் அடிப்படை நோக்கம் என்பதே நான் எனும் அகங்காரத்தை போக்குவதே ஆகும். பாத பூஜை செய்கிற போது மிக நிச்சயமாக ஒருவர் தன் அகங்காரத்தை, தான் எனும் அகந்தையை விட்டுகொடுத்தே அந்த காரியத்தை செய்ய வேண்டும். எனவே அவ்வாறு செய்கிற போது தீய கர்ம வினைகள் அழிகின்றன என்ற நம்பிக்கையும் உண்டு.

சுவாமி சின்மயானந்தா அவர்கள் பாத பூஜை குறித்து சொல்கிற போது சிவபெருமானை எப்படி சிவலிங்கம் குறிக்கிறதோ மஹா விஷ்ணுவை எவ்வாறு சாலிக்கிராமம் அடையாளப்படுத்துகிறதோ அது போலவே, குருவின் திருப்பாதம் என்பது மாணவனுக்கு திருப்பாதமாக இல்லாமல் கடவுள் தன்மையின் உருவமாகவே தெரிகிறது. கடவுளை நேரில் காண முடியாது, ஆனாலும் அதற்குரிய உருவகம் வேண்டும் என்பதால் குருவின் திருப்பாதம் வழிபாடுக்குரியதாகிறது. குருவின் திருப்பாதத்தை சிறிது நேரம் யாசகமாக பெற்று அதற்கு நம் பரிசுத்த பக்தியை வெளிப்படுத்தி வழிபடுகிறோம் என்கிறார்.

Tags:    

Similar News