தமிழ் மொழியில் இறைவனை தொழுதும், அழுதும், போற்றியும், துதித்தும் ஏராளமான பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. அதில் திருமுறை என்பது சைவத்தில் தோன்றிய முதன்மையான அம்சம் எனலாம். இலக்கியத்தன்மையும், பக்தி ரசமும் ஒரு சேர அமைந்தது இது. வேதத்தில் உள்ள அனைத்து சாரமும் இந்த திருமுறைகளில் உண்டு. இந்த புனிதமான திருப்பதிகங்கள் சைவத்தில் ஆழங்கால் பட்ட, ஆன்மீகத்தில் கரைகண்ட நாயன்மார்களால் பாடப்பெற்றது ஆகும்.
இவை வெறும் பாடல்களாக மட்டுமில்லை, இறைவனை துதித்து போற்றுகிரா பதிகங்களாக மட்டுமில்லை, இவை பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைந்தன. பேசாதவரை பேச் செய்தது, ஓரு பதிகம் மூடிய கதவுகளின் தாளை திறக்க செய்தது, மற்றொரு பதிகம் பாம்பு தீண்டி சிறுவனின் உயிரை மீட்டு வந்தது இது போல் பதிகங்கள் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.
இன்றைய நவீன யுகத்தில் கூட இறைவனின் பல்வேறு வரங்கள் வேண்டி வழிபடுபவர்கள் ஏராளம் உண்டு. பிள்ளை வரம் வேண்டி, குருவருள் வேண்டி, பொருளாதார மேன்மை வேண்டி, ஆரோக்கியம் வேண்டி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் அனைத்திற்கும் இங்கே தீர்வு உண்டு.
கிரகங்களினால் கோளாறா? கோளறு திருப்பதிகம் பாடுங்கள். வயிற்று வலியா? கூற்றாயின வாறு பதிகம் பாடுங்கள். இது போல நம் பிரச்சனைகளை தீர்க்கும் அருமருந்தாக இந்த பதிகங்கள் விளங்குகின்றன. நீங்கள் நல்ல ஞானம் பெற்ற ஜோதிடர்களை உங்களின் பிரச்சனைக்காக அணுகினால் கூட பரிகாரங்களின் வரிசையில் பதிகம் பாடுவதையும் சேர்த்தே பரிந்துரைப்பதையும் காணலாம்.
வாழும் காலத்தின் பிரச்சனைகளை சொல்லி, வாழ்வுக்கு பின்னான முக்தியை பாடி, இனி ஒருபோதும் பிறவாத வரத்தை கேட்க்கும் அரிய கற்பிதங்கள் இந்த பதிகங்களில் நிறைந்து கிடக்கின்றன. அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், ஆகியோர் பாடிய பதிகங்கள் தேவாரம் எனவும், மாணிக்கவாசகர் அருளியது திருவாசகம் எனவும் போற்றப்படுகிறது.
திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார் எனும் வரிகளுக்கேற்ப்ப, "அவனருளாளே அவன் தாள் வணங்கி "எனும் ஒரு வரி போதும் திருவாசகத்தின் பக்தி உணர்ச்சியை ஒருவர் உணர. அவன் அருள் இல்லையெனில், அவனை வணங்கும் பாக்கியம் யாருக்கு தான் கிட்டும்? பக்தி உணர்வை மேம்படுத்தி, முக்தி எனும் பிறவா நிலையை அருளும் பதிகங்களை போற்றுவோம், பாடுவோம், இறையுடன் கலந்திருப்போம். திருச்சிற்றம்பலம்.