நம் மரபில் மஞ்சளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? மஞ்சளின் மகிமை
மஞ்சள் இல்லாத வீடு முழுமையில்லா வீடு எனலாம். மஞ்சளை வட இந்தியாவில் ஹல்டி என்பார்கள். இந்திய பாரம்பரியத்தில் சமையலறையிலும் சரி, பூஜையறையிலும் சரி மஞ்சள் இல்லாமல் இருக்காது. அதன் ஆரோக்கிய அம்சங்கள் உலகறியும். அழகு சாதன பொருள் தொடங்கி, கிரிமி நாசினியாக பயன்படுவது வரை இன்னும் ஏராளமான நன்மைகளை கொண்டது மஞ்சள்.
அதுமட்டுமின்றி ஆன்மீக முறையிலும் மஞ்சளை பலவாறு பயன்படுத்துவது வழக்கம்.
ஒருவர் நெற்றியில் மஞ்சள் திலகம் இட்டு கொண்டால், அது மனநிலையிலும், உடல்நிலையிலும் நல்ல மாற்றத்தை உண்டாக்கும். வீட்டின் முகப்பு வாசலில் மஞ்சள் திலகம் வைத்தால் வீட்டினுள் எதிர்மறை எண்ணம் நுழையாமல் இருக்க அது உதவும் என்பது நம்பிக்கை. இலட்சுமி தேவிக்கும், விநாயகருக்கும் மஞ்சள் அர்ப்பணம் செய்வது மிகுந்த பொருளாதார நன்மைகளை வழங்கும்.
திருமண வைபவங்களில் மணமக்களுக்கு மஞ்சள் பூசும் சடங்கு, மஞ்ச நீராடல் போன்ற மங்களகரமான சடங்குகள் செய்வதால் குரு பகவானுக்கு மஞ்சள் உகந்தது எனும்படியால் அவரின் ஆசிர்வாதமும், மற்றும் உடல் மற்றும் மன தூய்மைக்கு மஞ்சள் உதவும் என்பதாலும், சரும நலனுக்கு அது ஏற்றது என்பதாலும் இவ்வாறான சடங்குகள் மஞ்சளை கொண்டு உருவாக்கபட்டன.
பூஜை செய்வது, தெய்வங்களின் திருவுருவத்தை மஞ்சளில் பிடித்து வைப்பது என ஏராளமான சடங்குகள் மஞ்சளை கொண்டு செய்யப்படுவதற்கான காரணம், அது இயல்பில் கிருமி நாசினி மற்றும் எதிர்மறையான அதிர்வுகளை தன்னகத்தே இழுத்து கொண்டு, நல்லதிர்வுகளை அவை வெளியிடும். இதனால் தான் திருமண நிகழ்வின் போது முதல் பொருளாக மஞ்சளை வாங்குவார்கள். இதனை உப்பு மஞ்சள் ஜவுளி என்று ஒரு விழாவகவே கொண்டாடி மகிழ்கிறோம்.
அதுமட்டுமின்றி கிரஹபிரவேசம் ஆன இல்லத்திலோ அல்லது பால் காய்ச்சி முதல் முறையாக குடியேற போகும் இல்லத்திலோ முதல் பொருளாக நீர், உப்பு மற்றும் மஞ்சளை எடுத்து செல்வதை நாம் பார்த்திருக்கிறோம்.
நம் முன்னோர்கள் ஒரு பொருளுக்கு அன்றாட சடங்கில், நிகழ்வில். பூஜை மற்றும் ஆன்மீக நிகழ்வுகளில் முக்கியத்துவத்தும் கொடுக்கிறார்கள் எனில் நிச்சயம் அது இன்றியமையாத தன்மையுடையதாக தான் இருக்கும். மஞ்சளில் ஆரோக்கிய பலன்கள், அதன் நற்தன்மைகள் தான் அவை அனைத்திலும் முதன்மையாக பயன்படுத்த காரணம்.