சிக்கல்களை தீர்க்கும் சிங்கவரம் ரங்கநாதர்!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சிங்கவரம் ரங்கநாதர் கோவில்.

Update: 2023-10-04 18:00 GMT

செஞ்சியை ஆண்ட ராஜா தேசிங்கு ரங்கநாதரை குலதெய்வமாக வணங்கி வந்ததாகவும் தாயார் அம்மாள் சன்னதி அருகில் இருக்கும் சுரங்கப்பாதை வழியாகவே செஞ்சி கோட்டையிலிருந்து ராஜா தேசிங்கு இந்த கோவிலுக்கு வந்து ரங்கநாதரை வணங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி இருந்த ரங்கநாதர் கோவிலில் தினசரி பூஜைகள் மட்டுமே நடந்து வந்தன. பக்தர்களின் தீவிர முயற்சியால் திருப்பணிகள் முடிவுற்று கடந்த 2001-ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்து சமய அறநிலைத்துறையினரால் பராமரிக்கப்படடு 53 வருடங்களுக்கு பிறகு கடந்த 2005- ஆம் ஆண்டு முதல் அறநிலையத்துறை மற்றும் உபயதாரர்களால் 10 நாள் பிரமோற்சவ விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டுகளில் சிறப்பு பூஜையும் சித்ரா பௌர்ணமி அன்று சுவாமி வீதி உலாவும் வைகாசியில் கருட சேவையும் ஆடி மாதம் பவித்ர உற்சவமும் ஆடிப்பூரத்தில் ஊஞ்சல் உற்சவமும் புரட்டாசி சனிக்கிழமைகளில் திருமஞ்சனமும் திருப்பாவாடை உற்சவமும் தை மாதம் திருப்பதியில் நடைபெறுவது போல ரத சப்தமி உற்சவமும் காணும் பொங்கல் மற்றும் தை அமாவாசை அன்று பகலில் உற்சவமும் பங்குனியில் ராமநவமி உற்சவமும் நடக்கிறது. மேலும் சுப முகூர்த்த நாட்களில் திருமணங்களும் அறுபதாம் கல்யாணமும் நடக்கிறது. தினமும் காலை ஏழு மணி முதல் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையும் ரங்கநாதரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் .கோவிலின் வரலாறு மிக சிறப்பாக கூறப்படுகிறது.

பல்லவ மன்னன் மகேந்திரவர்மரின் தந்தையான ஸ்ரீ சிம்ம விஷ்ணு ஆட்சி செய்து கொண்டிருந்த காலகட்டம். அவரது செஞ்சி அரண்மனைக்கு அருகே எழில்மிகு மலர் வனம் ஒன்று அமைந்திருந்தது. இங்கிருந்து தினமும் அரண்மனைக்கு பூக்கள் எடுத்துச் செல்லப்படும் . ஆனால் சில நாட்களாக அந்த வனத்தில் இருந்து பூக்கள் எதுவும் அரண்மனைக்கு வரவில்லை. மன்னன் என்னவென்று விசாரித்த போது வராகம் ஒன்று நந்தவனத்தின் பூக்களை எல்லாம் தின்று தீர்த்து விடுகிறது. எவ்வளவு முயன்றும் அந்த வராகத்தை பிடிக்கவோ கொல்லவோ முடியவில்லை என்று புகார் தெரிவித்தனர் .

ஒருநாள் சிம்ம விஷ்ணு அந்த வராகத்தை பிடிக்க நந்தவனத்தில் ஒளிந்து இருந்தார் . அப்போது வராகம் வந்து மேயத் தொடங்கியது. உடனே மன்னன் அதன் முன் குதித்து அதை வேலால் குத்த முயன்றார். ஆனால் அந்த வராகம் தப்பி ஓடியது . மன்னன் விடாமல் துரத்தினார். ஒரு கட்டத்தில் வராகம் நந்தவனத்தை தாண்டி மலைமேல் ஏறத் தொடங்கியது. மன்னனும் விடாமல் பின் தொடர்ந்தார்.

மலை உச்சிவரை சென்றவராகம் அங்கே ஒரு கணம் நின்று மன்னனை திரும்பிப் பார்த்து மறைந்தது. மன்னன் வராகம் மறைந்த உச்சிக்குச் சென்று பார்த்தால் அங்கே பிரம்மாண்டமான ரங்கநாதர் திருமேனி இருந்ததாம். வந்தது சாதாரண வராகம் இல்லை என்று உணர்ந்த மன்னன் அன்று முதல் அந்த ரங்கநாதரை வழிபடத் தொடங்கினார். அந்த சிம்ம விஷ்ணுவின் மகன் மகேந்திரவர்மன் அந்த மலையை குடைந்து ரங்கநாதருக்கு கோவில் அமைத்தார் என்பது வரலாறு.



Similar News