சிறப்பான வாழ்வு தரும் சிறுவாபுரி முருகன்!

சென்னைக்கு வட மேற்கே சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் மேற்கே பிரியும் 33-வது கிலோ மீட்டரில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் தோரண வாயில் அமைந்துள்ளது.

Update: 2024-05-07 18:23 GMT

சிறுவாபுரி முருகன் அபிஷேகத்தின் போது பார்க்க பெருமாளை போல இருக்கிறார் .ஒரு நிமிடம் உங்கள் கண்களை மூடி எதிரே சிறுவாபுரி முருகனை காண்பித்தால் ஏதோ பெருமாள் கோவிலில் கருவறைக்கு முன்னே நின்று கொண்டிருக்கிறீர்கள் என்றே தோன்றும். திருமலையில் சீனிவாசன் எப்படி நிற்கிறாரோ அதேபோல இத்தலமுருகனும் நிற்கிறார். முருகப்பெருமான் வள்ளியை திருமணம் செய்ய செல்லும் வழியில் சிறுவாபுரியில் இளைப்பாறிவிட்டு சென்றார் என்றும் இந்த ஆலயத்தில் தங்கி அமுது உண்ட இந்திரன் தேவர்களுக்கு வீடு பேறு கிடைக்க வேலவன் அருள் புரிந்தார் என்றும் தல வரலாறு கூறுகிறது .

திரேதாயுகத்தில் ராமர் அஸ்வமேதயாகம் செய்ய விருப்பம் கொண்டார். அப்போது யாகப் பசுவாக அனுப்ப வேண்டிய குதிரையை ஏவி விட்டார் .அந்த குதிரை வால்மீகி முனிவர் ஆசிரமத்திற்கு வர அங்கு வளர்ந்த ராமரின் பிள்ளைகளான லவனும் குசனும் அந்த குதிரையை கட்டிப்போட்டர்கள். இதனை அறிந்த ராமர் உடனே லட்சுமணனை அழைத்து குதிரையை மீட்டு வரச் சொன்னார். அது முடியாமல் போகவே ராமரே நேரில் சென்று சிறுவர்களிடம் போரிட்டு அவர்களை வென்று குதிரையை மீட்டு சென்றார் .ராமனிடம் லவனும் குசனும் போர் செய்த இடமே சிறுவாபுரி .இது ராமாயண செய்தியாகும்.

அருணகிரிநாதர் நான்கு திருப்புகழ் பாடல்களால் இத்தல அழகு முருகனைப் பற்றி பாடியுள்ளார் என்றால் இந்த ஆலயம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறது என்பதை அறியலாம் .முருகம்மையார் என்ற முருக பக்தர் சிறுவாபுரியில் வாழ்ந்து வந்தார். இந்த அம்மையார் எப்போதும் முருகன் நாமத்தையே உச்சரித்து வந்தார். இதனை பொறுக்காத இவரின் கணவர் தன் மனைவியான முருகம்மையாரின் கரங்களை வெட்டினார் .உடனே முருகா என்ற அம்மையார் முருகனை நினைத்து அழுதார். விரைவில் முருகன் அம்மையாருக்கு தரிசனம் தந்து வெட்டிய கரத்தை மீண்டும் பழையபடி சேர்த்து வைத்தார். இந்த அற்புதம் இத்தலத்தில் நடந்தது. இதனை தவத்திரு முருகதாஸ் சுவாமிகள் பாடல் மூலமாக எழுதியுள்ளார்.

அண்ணாமலையார் மரகத பச்சைையில் சன்னதி கொண்டுள்ளார் .முருகன் வள்ளியுடன் திருமண கோலத்துடன் காட்சி தருகிறார் .நீண்ட காலம் திருமணம் நடக்காதவர்கள் இந்த சன்னதியில் வந்து பூஜைகளும் வழிபாடுகளும் பரிகாரங்களும் செய்தால் விரைவில் திருமணம் கைகூடும். அடுத்து உண்ணாமுலை அம்மன் சன்னதியில் அனைவரும் பிரார்த்தனை செய்யலாம். ஆலயத்தை சுற்றி வரும் வழியில் மரகத விநாயகர் சன்னதியும் அருகில் மகிழமரமும் உள்ளன .ஆதிமூலவர் பாலசுப்பிரமணியர் சன்னதியில் அர்ச்சனை செய்யப்படுகிறது.

இந்த முருகர் மிக மிக எளிமையானவர் எதிர்பார்ப்பு அற்றவர்.இத்தலத்திற்கு வருபவர்கள் கடுமையாக விரதம் இருந்து பசி பட்டினியுடன் தரிசிக்க வேண்டியதில்லை. இங்கு நேரில் வரவும் வேண்டியதில்லை. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது போல சிறுவாபுரி முருகனை நினைத்தாலே வேண்டியது வேண்டியபடியே கிடைக்கும் .

Similar News