தமிழ்நாட்டின் உயரமான சில தெய்வ சிலைகள்!
இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் கூட தெய்வங்களின் பிரமாண்டமான சிலைகளை காண முடியும். அதே போல தமிழ்நாட்டிலும் கூட உயரமான தெய்வச் சிலைகள் பல இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.
சேலத்தில் உள்ள 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை :
உலகில் மிக உயரமான முருகன் சிலையாக மலேசியாவில் உள்ள 10 மலை அடிவாரத்தில் உள்ள முருகன் சிலை கருதப்பட்டு வந்தது. இதன் உயரம் 142 அடி ஆகும். இந்த நிலையில் பத்துமலை முருகன் சிலையை செய்த அதே ஸ்தபதியைக் கொண்டு சேலத்தில் புத்திர கவுண்டம்பாளையம் என்ற இடத்தில் 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 2015 - ஆம் ஆண்டு திட்டமிட்டு 2016 ஆம் ஆண்டு முதல் இதன் திருப்பணி தொடங்கியது.
முருகனின் ஆறுபடை வீடுகளில் இருந்து மணல் எடுத்துவரப்பட்டு இந்த முருகன் சிலை வடிக்கும் பணியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மலேசியாவில் முருகன் சிலையை வடிவமைத்த திருவாரூர் தியாகராஜ ஸ்தபதியின் குழுவினர் தான் இந்த முருகன் சிலையையும் வடித்துள்ளனர். வசீகரிக்க முகம் அழகுடன் அமைந்த இந்த முருக பெருமான் வலது கையில் அபய ஹஸ்த முத்திரையை தாங்கி இடது கையில் வேல் பிடித்தபடி மணி மகுடம் சூடிய நிலையில் நின்ற திருக்கோளத்தில் அருள் பாலிக்கிறார். இந்த சிலையின் அருகிலேயே லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் சிலைக்கு மேலே சென்று முருகனின் கையில் உள்ள வேலுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்யலாம்.
வேலூரில் உள்ள 23 அடி உயர நடராஜர் சிலை:
வேலூரில் பொற்கோவில் என்று அழைக்கப்படும் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் 23 அடி உயர நடராஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் அருகே உள்ள திம்மக்குடியில் 25 ஆண்டுகளாக சிற்பக் கலைக்கூடம் நடத்திவரும் வரதராஜ் ஸ்தபதி 10 ஆண்டுகளாக இந்த சிலையை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். இந்த சிலையானது 15 டன் எடையுடன் 23 அடி உயரம் 18 அடி அகலம் கொண்டதாக வடிக்கப்பட்டுள்ளது. நான்கு கரங்களுடன் காணப்படும் இந்த நடராஜரை சுற்றிலும் உள்ள திருவாச்சி போன்ற அமைப்பில் 12 தாமரை மலர்கள், 52 சிங்கங்கள் , 34 பாம்புகளின் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.