பொருளாதார தடையை நீக்க சங்கு பூ பரிகாரம் செய்வதெப்படி?

Update: 2022-12-16 00:30 GMT
பொருளாதார தடையை நீக்க சங்கு பூ பரிகாரம் செய்வதெப்படி?

இறைவனை சென்றடையும் கருவிகளில் மிக முக்கியமானது மலர்கள். இயற்கையோடு இசைந்து, பல வண்ண நிறங்களில், மனதை வருடும் மணம் வீசி மனதை ஒரு முகப்படுத்துவதால் வழிபாட்டில் மலர்களின் பங்கு மிகவும் அதிகம். அதிலும் குறிப்பாக வழிபாட்டிற்கு உகந்த மலர்களென சிலது உண்டு. குறிப்பிட்ட சில மலர்களை பூஜைக்கு பயன்படுத்துவார்கள். குறிப்பிட்ட தெய்வங்களுக்கு உரிய மலர்களும் உண்டு. ஒரு சில மலர்கள் வழிபாட்டுக்கு ஏற்புடையது அல்ல என்ற பாகுபாடும் உண்டு.

அந்த வகையில் சங்கு பூ என்பது வழிபாட்டிற்கு மிகவும் ஏற்புடைய மலராக கருதப்படுகிறது. அதனுடைய வண்ணமும், வடிவமும் அதனை வழிபாட்டிற்கு ஏற்புடையதாக கருத செய்கிறது. மேலும் அந்த பூ துர்கையின் மறு அவதாரம் எனவும் சொல்லப்படுவதுண்டு. சங்கு பூவிற்கு ஆங்கிலத்திலும் அறிவியல் ரீதியாகவும் பல பெயர்கள் உள்ளன.

நம் மரபில் ஏராளமான நம்பிக்கைகள் நிலவி வருகின்றன. அதற்கு பின் ஒரு அறிவியல் தாத்பரியமும் சொல்லப்படுவதுண்டு. அந்த வகையில் சங்குபூ குறித்து சொல்லப்படும் நம்பிக்கை யாதெனில், சங்கு பூவை வைத்து வழிபடுபவர்களுக்கு வெற்றியின் வாசல் விரைவாக திறக்கும். அதிலும் குறிப்பாக சங்குபூ விஷ்ணு வழிபாட்டிற்கு மிகவும் உகந்தது. காரணம் சங்கு சக்ரதாரியான விஷ்ணு பெருமானுக்கு சங்கு வடிவில் இருக்கும் பூவை அர்ப்பணிப்பதென்பது பல நன்மைகளை கொடுக்கும்.

மேலும் இதனுடைய வண்ணத்தின் அடிப்படையில், இந்த மலரை சனிபகவானுக்கும் அர்ப்பணிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. குறிப்பாக பொருளாதார சிக்கல் இருப்பவர்கள், அதிலிருந்து விடுபடுவதற்கு இறைவனிடம் வேண்டி கொண்ட பின் திங்கள் அல்லது சனிக்கிழமைகளில் மூன்று சங்கு பூக்களை ஓடும் தண்ணீரில் விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பொருளாதார தடைகள் நீங்கி, பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. இந்த பரிகாரத்தை செய்த ஒரு சில நாட்களிலேயே இந்த மாற்றத்தை உணர முடியும் என்கின்றனர்.

வழிபாட்டுக்கு மட்டுமின்றி, ஆரோக்கிய ரீதியாகவும் இந்த மலர் பல நன்மைகளை தருவதுண்டு. மைக்ரைன் தலைவலி, கண் பார்வை கோளாறு, ஜீரண பிரச்சனை, தொண்டை பிரச்சனை, மஞ்சள் காமாலை மற்றும் புண் போன்ற உடல் உபாதைகளுக்கு மருந்தாகவும் இந்த மலர் பயன்படுகிறது.

Tags:    

Similar News