தீபாவளி தீபாவளி அல்லது பேச்சு வழக்கில் தீவாளி என அழைக்கப்படும் பண்டிகை. தீபங்களின் திருவிழா என்றே அழைக்கப்படுகிறது. தீப வரிசையில் மிளிர்வது இல்லங்கள் மாத்திரம் அல்ல நம் மனமும் தான்.. துன்பமெனும் இருள் மறைந்து இன்னம் எனும் வெளிச்சம் பாயும் நேரம். ஒட்டு மொத்த மக்களின் உற்சாகத்தை உயர்த்தும் உன்னத பண்டிகை தீபாவளி.
இந்தியாவின் பெரும்பாலான பண்டிகையை போல இந்த பண்டிகையும் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு கலாச்சார கூறுகளின் அடிப்படையில் கொண்டாடப்படுகின்றன. வேற்றுமையில் ஒற்றுமை என்கிற நம் தார்பரியத்தின் படி, கொண்டட்டத்தின் வகைகளும், விதங்களும் மாறுபட்டாலும் மகிழ்ச்சியை நாம் அனைவருமே பகிர்ந்து கொள்கிறோம்.
அந்த வகையில் ஒரு சிலர் இந்த பண்டிகை இலட்சுமி தேவியும் ஶ்ரீவிஷ்ணுவும் திருமணம் செய்து கொண்ட நன்நாள் என்கின்றனர். வங்காளத்தில் இந்த நாள் காளியின் வழிபாட்டிற்கு அர்பணிக்கப்படுகிறது. மேலும் இந்நாளில் தான் இராமர் தனது வனவாசம் முடித்து அயோத்தி திரும்பினார் என்றும், ஶ்ரீராமரின் வருகையை அயோத்தி மக்கள் விழாக்கோலமாக கொண்டாடி மகிழ்ந்த இந்நன்நாளே தீபாவளி எனவும் சொல்லப்படுவதுண்டு. மேலும் இந்நாள் குறித்து சொல்லப்படும் வெகு பிரபலமான புராணக்கதை என்பது ஶ்ரீகிருஷ்ணர் நரகாசுரன் என்ற அரக்கனை வதம் செய்த இந்நாள் தான் தீபாவளி. அதாவது தீமைகளில் இருந்து பகவான் மக்களை விடுவித்த இந்நாள் கொண்டாடத்துக்குரியது என்கிற கருத்தும் உண்டு.
நம் தமிழகத்தில் இந்நாளில் அதிகாலை எழுந்து எண்ணை நீராடி, புத்தாடை உடுத்தி, கடவுளை வழிபட்டு, இனிப்புகளை பகிர்ந்து தீமை அழிந்ததன் எதிரொளியாய் பட்டாசுகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை உற்சாகத்தை கொண்டாடுவர். அதை போலவே இந்நாளின் மற்றொரு சிறப்பம்சம் என்பது தீபாவளி நாளின் நீராடுதலை யாரும் குளியல் என்று கடந்து விடுவது இல்லை. அன்று யாரை கண்டாலும் கங்கா ஸ்நானம் ஆச்சா? என்று கேட்பதே வழக்கம். இதன் பொருள் தீபாவளி நன்னாளில் நீர் அனைத்தும் கங்கையின் தன்மையை கொண்டு கங்கை நீரின் அம்சத்துடனே திகழும். எனவே கங்கா ஸ்நானம் ஆனதா என கேட்பது வழக்கம்.