சுக்ரீவன் வழிபட்ட சுக்ரீஸ்வரர்!

திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் எட்டு கிலோமீட்டர் தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் அமைந்திருக்கிறது சுக்ரீஸ்வரர் திருக்கோவில்.

Update: 2024-05-31 17:33 GMT

ராமாயண காலத்தில் ராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீவன் இங்கு ஈஸ்வரனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தலபுராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக ஆலயத்தின் அர்த்த மண்டப சுவரில் சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்யும் சுக்ரீவனின் புடைப்புச் சிற்பம் உள்ளது. இதில் இறைவன் 'குரக்குத்தளி ஆடுடைய நாயனார்' என்றும் அழைக்கப்படுகிறார். தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில் சமயகுரவர்கள் ஒருவரான சுந்தரரின் பாடல் பெற்ற தலமாகும். ஆகையால் இது எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த கோவில் ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால் இப்போது 1220 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு தான் இங்கு காணப்படுகிறது. பிரமிக்க வைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள கோவில் மூலவரான சுக்ரீஸ்வரர் சிவலிங்கம் வடிவில் எழுந்தருளியுள்ளார். அவருக்கு வலதுபுற ஆவுடைநாயகி என்ற பெயரில் அம்மன் சன்னதி கொண்டுள்ளார். சுற்று பிரகாரங்களில் கன்னி மூல விநாயகர், தட்சிணாமூர்த்தி ,சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ,பைரவர் சன்னதிகளும் வேறு எந்த சிவன் கோவில்களிலும் இல்லாத சிறப்பாக இந்த ஆலய இறைவனின் கருவறைக்கு எதிர் திசையில் பத்ரகாளியம்மனும் காட்சி தருகிறார்கள்.

நீர் , நிலம், காற்று ,நெருப்பு ,ஆகாயம் என பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் பஞ்சலிங்கங்கள் இக்கோவிலில் அமைந்துள்ளன. இத்தல மூலவர் சுக்ரீஸ்வரர் அக்னி லிங்கமாக வழங்கப்படுகிறார். ஆலய பிரகாரச் சுற்றிலும் வாயுலிங்கம் , அப்பு லிங்கம் தேயுலிங்கம் ஆகியவை உள்ளன ஐந்தாவது லிங்கமான ஆகாசலிங்கம் சிவனுக்கு பிடித்த வில்வமரத்தின் அடியில் அமைந்துள்ளது. ஆலயம் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று தொல்லியல் துறையால் வரையறுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News