சிவனின் உக்கிர ரூபமான கால பைரவரை வணங்குவதால் ஏற்படும் ஆச்சர்ய பலன்கள்
சிவனின் உக்கிர ரூபமான கால பைரவரை வணங்குவதால் ஏற்படும் ஆச்சர்ய பலன்கள்
கால பைரவர் என்பது சிவபெருமானின் உக்கிரமான அவதாரம். எப்போதும் உக்கிரத்துடன் இருக்க கூடிய தன்மை இவருடையது. கனல் கொப்பளிக்கும் கண்கள், கூர்மையான பற்கள், சுழலும் கூந்தல், கழுத்தை சுற்றிய நாகம் என ரெளத்திர நாதராக காட்சி தருபவர்.
இவர் எப்போது நாய் போன்ற உருவுடன் காட்சி தருபவராக இருக்கிறார். இவரை வழிபடுவதால் எதிரிகள் விலகி போவார்கள். வெற்றிக்கு அதிபதியானவராக அனைத்து பொருள்ரீதியான நன்மைகளையும் ஏற்படுத்தி கொடுக்கும் கருணாமூர்த்தியாக காலபைரவர் திகழ்கிறார்.
யாரொருவர் இவரை வழிபடுகிறார்களோ, அவர்களின் பாதையில் வரும் சிக்கல்களை தீர்ப்பவராக, ஏதேனும் தீய சக்திகள் ஆன்மாவில் படிந்திருக்குமே ஆனால் அவற்றை அகற்றுபவராக, அனைத்து சூழல்களை தன்னை வணங்கும் பக்தர்களுக்கு சாதகமானதாக மாற்றுபவராக காலபைரவர் விளங்குகிறார்.
ஒருமுறை பிரம்ம தேவருடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக, சிவபெருமான் கால பைரவர் ரூபம் கொண்டு பிரம்ம தேவரின் ஐந்து தலைகளில் ஒன்றை கொய்தார். அந்த தோஷமும் பாவமும் நீங்குவதற்காக அவர் பிரவேசித்த நகரமே இன்றையா வாரணாசி எனப்படும் பெனாரஸ். இன்றும் கூட காசிக்கு யாத்திரை மேற்கொண்டால் காலபைரவரை வணங்காமல் திரும்ப கூடாது என்பார்கள். காரணம் அங்கே இருக்கும் கால பைரவரை வழிபட்டால் தான் யாத்திரை முழுமை பெறும் என்பது நம்பிக்கை.
காலபைரவருக்கு மற்றொரு பெயரும் உண்டு . இவரை ஷேத்ர பாலகர் என்றும் அழைப்பார்கள். இதன் பொருள் கோவிலை காப்பவர் என்பதாகும். இன்றும் கூட கோவிலின் நடை அடைக்கப்படும் பொழுது இறுதி பூஜை கால பைரவருக்கு செய்யப்பட்ட கோவிலின் பொறுப்புகள் காலபைரவரிடம் ஒப்படைக்கப்படும். அதை போலவே அதிகாலை நடை திறக்கப்படும் பொழுதும், அவருக்குரிய பூஜைகள் செய்யப்பட்டு அவரிடமிருந்து முறைப்படி கோவில் பொறுப்புகள் பெற்றுக்கொள்ளப்படும்.