திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோவில் தமிழகத்தில் கும்பகோணம் தாலுகாவில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவழஞ்சுழி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது . இக்கோவிலின் பிரதான மூலவர் சிவபெருமான், கபர்தீஸ்வரர் எனும் திருப்பெயரிலும், அம்பாள் பிருஹந்நாயகி என்ற திருப்பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். மேலும் இக்கோவில் தேவாரம் பாடல் பெற்ற ஸ்தலங்களுள் ஒன்றாக திகழ்கிறது.
சோழர்கள், நாயகர்கள் மற்றும் தஞ்சை மராத்தா சாம்ராஜ்ஜியம் போன்றவர்களின் பங்களிப்பு இந்த கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போதிருக்கும் ஆலயம் சோழ சாம்ராஜ்யத்தாலும், பின்னாளில் நிகழ்ந்த மாற்றங்கள் தஞ்சை நாயக்கர்களாலும் உருவாக்கப்பட்டதாகும். மாநிலத்திலேயே மிகப்பெரிய வளாகத்தை கொண்ட கோவில்களுள் இதுவும் ஒன்று. இந்த கோவில் வளாகத்தினுள் ஏராளமான சந்நிதிகள் உள்ளன. கருவறையில் லிங்க சொரூபமாக கபர்தீஸ்வரரும், எதிரே நந்தியும் பலிபீடமும் உள்ளன. இடப்புறம் சோமஸ்கந்தர், நடராஜர், சிவகாம சுந்தரி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்ரமணியர் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன.
இக்கோவிலின் சிறப்பம்சம் யாதெனில், இக்கோவிலின் மூலவர் சிவபெருமான் எனினும், இக்கோவிலில் இருக்கும் சுவேத விநாயகர் மிகவும் புகழ்பெற்றவர் ஆவார். இவரை வெள்ளை விநாயகர் என்றும் அழைக்கின்றனர்.
இவர் குறித்து சொல்லப்படும் புராணக்கதை யாதெனில், பாற்கடலை கடைந்து அமுதை எடுக்கிற போது, அதிலிருந்து வெளிப்பட்ட நஞ்சை பருக வந்த சிவபெருமான், எந்தவொரு காரியத்தையும் செய்யும் முன்னர் விநாயக பெருமானை வணங்குதல் மரபு எனவே உடனே அவருக்கான வழிபாட்டை நிகழ்த்த சொன்னார். எனவே தேவர்கள் பாற்கடலில் வந்த அலையின் நுரை கொண்டு இங்குள்ள விநாயகரை செய்தனர். அலைகடலின் நுரையால் செய்த திருவுருவம் என்பதால் விநாயகர் பரிசுத்தத்தின் அடையாளமாக இன்றும் வெள்ளி நிறத்திலேயே காட்சி தருகிறார். அந்த வெள்ளை நிறத்தை குறிக்கும் வண்ணம் அவரை சுவேத விநாயகர் என்று அழைக்கின்றனர்.
கடல் நுரையால் செய்த திருவுருவம் என்பதால் இவருக்கு அபிஷேகம், வஸ்திரம், புஷ்பம் ஆகியவை சாற்றப்படுவதில்லை. மாறாக பச்சை கற்பூரத்தை மட்டுமே பொடியாக தூவுகின்றனர். அதுமட்டுமின்றி இந்த இடத்தில் காவிரி ஆறு கூர்மையான சுழி போன்ற வளைவை எடுப்பதால் இந்த இடம் திருவலஞ்சுழி என்றும் அழைக்கப்படுகிறது.