கல்வி உதவித்தொகை, விபத்து நிவாரணம் வழங்க கோவில் பூசாரிகள் நல வாரியம்!

நலவாரியம் 2015ஆம் ஆண்டிற்கு பிறகு பெயரளவில் கூட செயல்படவில்லை என்றும், இதனால் புதிதாக சேர விரும்பும் பூசாரிகளின் விண்ணப்பங்கள் பெரும்பாலானவை நிராகரிக்கப்பட்டு வந்ததாகவும் புகார்கள் எழுந்தன.

Update: 2021-02-25 08:05 GMT

கடந்த ஐந்து வருடங்களாக செயல்பாட்டில் இல்லாத கோவில் பூசாரிகளுக்கான நல வாரியத்திற்கு தற்போது புதிதாக இணையதளம் ஒன்று துவக்கப்பட்டுள்ளது கோவில் பூசாரிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2007இல் கோவில் பூசாரிகளுக்கு என நலவாரியம் துவங்கப்பட்டது. இந்த கிராம கோவில் பூசாரிகள் நலவாரியம் இந்து அறநிலையத் துறை அமைச்சர் மற்றும் ஆணையர்கள் கொண்டதாக அமைக்கப்பட்ட ஒரு நலவாரிய அமைப்பாகும். இதன் மூலம் கோவில்களில் பணி புரிந்துவரும் பூசாரிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்குவது புதிதாக பெயர் சேர்ப்பது மற்றும் பெயரினை புதுப்பிப்பது போன்றவை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

 

மேலும் கல்வி உதவித் தொகை, விபத்து நிவாரணம் போன்றவை இந்த நல வாரியம் மூலம் கோவில்களில் பணியாற்றி வரும் பூசாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த நலவாரியம் 2015ஆம் ஆண்டிற்கு பிறகு பெயரளவில் கூட செயல்படவில்லை என்றும், இதனால் புதிதாக சேர விரும்பும் பூசாரிகளின் விண்ணப்பங்கள் பெரும்பாலானவை நிராகரிக்கப்பட்டு வந்ததாகவும் புகார்கள் எழுந்தன.

 

இதனால் பூசாரிகள் நலவாரியம் முன்புபோல் செயல்பட வேண்டும் என்று கோவில் பூசாரிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த புகாரின் முதல் நடவடிக்கையாக தற்போது பூசாரிகள் நலவாரியத்திற்கு என புதிய இணையதளம் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. 

இதனால் இனி பூசாரிகளுக்கு கிடைக்க வேண்டிய கல்வி உதவி, விபத்து நிவாரணம், பெயர் சேர்த்தல் மற்றும் புதுப்பித்தல் போன்றவை அனைத்தும் இந்த இணையதளம் மூலமாக மேற்கொள்ளப்படும் என்றும் இந்த இணைய தளத்தை தொடங்கி வைப்பது அளவற்ற மகிழ்ச்சி தருவதாகவும் இணையதளத்தை தொடங்கி வைத்த பூசாரிகள் நலச் சங்க மாநில தலைவர் வாசு தெரிவித்தார்.

 

இரு மாதங்களுக்கு முன் கிராம பூசாரிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை ₹1000ல் இருந்து ₹3000 ஆக உயர்த்தி முதல்வர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா சமயத்திலும் கிராமக் கோவில் பூசாரிகளுக்கு ₹1000 உதவித் தொகையும் வழங்கினார். எனவே கிராம பூசாரிகளுக்கு உதவும் வண்ணம் மேலும் பல திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News