பகைமையை விரட்டும் தைப்பூசம் - உருவான வரலாறும் விரதம் கடைபிடிக்க வேண்டிய முறைகளும்!

முருகனுக்கு மிகவும் உகந்த தைப்பூச திருவிழா உருவான வரலாறு பற்றி காண்போம்.

Update: 2024-01-25 00:30 GMT

தை மாதம் பூச நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமியை தைப்பூசம் என்ற பெருவிழாவாக கொண்டாடுகிறோம். இந்த நாளில் தான் முன்னொரு காலத்தில் உலகம் உண்டாக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தைப்பூசத்தை ஒட்டி விசேஷமான பிரமோற்சவம் நடைபெறும். தைப்பூச நாளில் அங்கே அஸ்வமேத பிரதட்சனம் என்று கோவிலை சுற்றி வருவது விசேஷம். சோழ மன்னர்களில் ஒருவன் இவ்வாறு சுற்றி வந்த தன்னுடைய பிரமாதத்தை தோஷம் நீங்க பெற்றதாக தல வரலாறு சொல்கிறது தைப்பூசம் என்றதும் அடுத்த வள்ளலார் ஞாபகம் வரும் முருக பக்தர்களுக்கு தைப்பூசம் என்றதும் முருகப்பெருமானின் ஞாபகம் தான் வரும் 'சுக்குக்கு மிஞ்சின மருந்தும் இல்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சின தெய்வமும் இல்லை' என்பது பழமொழி.


ஒரு சமயம் பரமேஸ்வரனை பிரிந்து பார்வதி தேவி பூலோகத்தில் பிறந்தாள். இமயவன் புத்திரியாக பிறந்து சிவபெருமானை அடைய வேண்டும் என்று கடுந்தவம் இருந்தாள்.அந்த சமயம் சிவபெருமான் தவத்தில் இருந்தார். தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மன்மதன் சிவபெருமானின் மீது காமக்கணைகளை தொடுத்து அவருடைய தியானத்தை கலைத்தான். இதனால் மன்மதன் துன்பப்பட்டது ஒரு புறம் என்றாலும் தியானம் கலைந்த சிவபெருமான் பார்வதி தேவியின் தவத்தை அறிந்து அவரை திருமணம் செய்து கொண்டார்.


அப்போது தேவர்கள் இணையில்லாத இறைவா எங்கள் துயர் தீர தங்கள் சக்திக்கு நிகரான ஒரு குமரன் பிறக்க வேண்டும். அப்பொழுது தான் சூரபத்மன், தாரகாசுரன் போன்றவர்களின் ஆணவம் அழியும் என்று வேண்டினர்.அப்பொழுது சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு ஆறு பொறிகளாக பிரிந்தது. அந்த நெருப்பால் உலகம் முழுவதும் தவிக்க ஆரம்பித்தது. இதை கண்டு தேவர்களும் கூட அஞ்சினர். சத்தம் கேட்டு பார்வதி தேவி அங்கே விரைந்து வர அவரது உடலில் இருந்து சிந்திய வியர்வையில் இருந்து ஒரு லட்சம் வீரர்கள் ஆயுதங்களுடன் தோன்றினர்.


பார்வதியின் கால் சிலம்பிலிருந்து உதிர்ந்த நவரத்தினங்கள் ஒன்பதில் இருந்து 9 சக்திகள் பிறக்க அந்த நவகன்னியர்களிடம் இருந்து 9 வீரர்கள் தோன்றினார். அவர்கள் வீரவாகுதேவர், வீரகேசரி, வீரமாமகேந்திரர் ,வீரம மகேஸ்வரன், வீரமாபுரந்தரர், வீரராகவர், வீரமார்த்தாண்டர் ,வீராந்தகர், வீரதீரர் என்ற பெயர்களை பெற்றனர். முருகப்பெருமான் அவதாரத்திற்கு பின் அவர்கள் பூலோகம் வந்தனர். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய அந்த ஆறு தீப்பொறிகளையும் தகிக்கும் வெப்பத்தை தாங்கிக் கொண்டு வாயு பகவான் சரவண பொய்கையில் கொண்டு போய் சேர்த்தார்.


அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக மாறின. அந்த ஆறு குழந்தைகளையும் திருமால் ஆணைக்கிணங்க கார்த்திகை பெண்கள் வளர்த்தனர். கார்த்திகை பெண்கள் வளர்த்த அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி தேவி பூமியில் வந்து கையில் எடுக்க ஆறு குழந்தைகளும் ஆறுமுகம் 12 கைகளை உடைய ஒரு குழந்தையாக உருவெடுத்தது .இதை அடுத்து அசுரர்களை அழிப்பதற்காக முருகப்பெருமானுக்கு 11 சக்திகள் ஒன்றிணைந்த வேல் ஒன்றை ஆயுதமாக பார்வதி தேவி வழங்கினார். அந்த தினமே தைப்பூச தினமாக கொண்டாடப்படுகிறது.


தைப்பூசம் அன்று காலையிலிருந்து குளித்து தூய்மையான உடை உடுத்தி முருகப்பெருமானை வழிபட வேண்டும். முருகப்பெருமான் படத்திற்கு அல்லது விக்கிரகத்திற்கு முருகப்பெருமானின் நாமங்களை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். வெற்றிலை, பாக்கு ,பழம், தேங்காய் படைத்து சுவாமக்கு நைவைத்தியம் செய்வது நல்லது. சிலர் அன்று முழுவதும் எதையும் சாப்பிடாமல் உபவாசம் இருப்பார்கள். சிலர் பாலும் பழமும் மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு பொழுது சாப்பிட்டு விரதம் இருப்பார்கள். அவரவர் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு எப்படி விரதம் எடுக்க வேண்டுமோ எடுத்துக் கொள்ளலாம்.


தைப்பூசம் அன்று முருக பெருமான் ஆலயம் சென்று வழிபட்டு வரலாம். அன்றைய தினம் தேவையற்ற வார்த்தைகளை பேசுவதோ, கோபப்படுவதோ , வீண் விவாதங்கள் செய்வதோ கூடாது .முருகப்பெருமான் நாமத்தை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். முருகப்பெருமானை நினைத்து தைப்பூசம் விரதம் இருந்தால் பகைமை அழியும், நவகிரக தோஷம் நம்மை நெருங்காது, குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும் .மொத்தத்தில் எல்லா வகையிலும் சுபக்ஷமான வாழ்வை பெறலாம்.

Similar News