கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் வரலாறு!
கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் ஆலயத்தை பற்றியும் வரலாறு பற்றியும் காண்போம்.
கோயமுத்தூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது கோனியம்மன் திருக்கோவில். இந்த ஆலயத்தை மையமாக வைத்து கோயம்புத்தூர் நகரம் அமைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது .இந்த ஆலயம் 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூர் நகரம் அடர் மரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. அந்த பகுதியில் வாழ்ந்த இருளர்களின் தலைவனான கோவன் என்பவர் அதனை சீர்படுத்தி நகராக மாற்றி ஆட்சி புரிந்தார். ஒரு சமயம் கோவனின் ஆட்சியில் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் அனைவரும் வாழ வழி இன்றி தவித்து நின்றனர் .
மக்களின் நிலையை கண்டு செய்வதறியாத திகைத்த கோவன் தனது ஆட்சியின் கீழ் வாழும் மக்கள் பஞ்சம் பிணிகளில் இருந்து விடுபட்டு வாழவும் தங்களின் வாழ்க்கையில் நன்மைகள் பல பெறவும் வேண்டி வனப்பகுதியில் சிறு நிலத்தை சீரமைத்து அங்கு கல் ஒன்றினை வைத்து அம்மனாக எண்ணி வழிபட தொடங்கினார் .இதை அடுத்து அந்த பகுதி மக்கள் பஞ்சம் நீங்கி செழிப்புற்று வாழ தொடங்கினர் .கோவனுக்கு பின் ஆட்சிக்கு வந்த இளம் கோசர் என்பவர் இந்த பகுதியை ஆட்சி செய்தார். அவரது ஆட்சியில் சேர மன்னன் ஒருவன் படையெடுத்து வந்தான். உடனே இளங்கோசர் நாட்டை காப்பதற்காக கோவன் புத்தூரில் மையத்தில் ஒரு கோட்டையையும் மண் மேட்யையும் கட்டி அதில் காவல் தெய்வமான அம்மனை வைத்து வழிபட்டார். அந்த அன்னையே கோனிஅம்மன் என்று வழிபடப்படுகிறாள்.
இந்த ஆலயத்தில் அருளும் கோனியம்மன் வடக்கு நோக்கி பராசக்தியின் அம்சமாக அருள்பாலிக்கிறாள். தன் எட்டு கரங்களில் சூலம் ,உடுக்கை, வால், சங்கு, கபாலம், அக்னி ச,க்கரம் ,மணி ஏந்தி இருக்கிறாள். அதுமட்டுமின்றி தன்னுடைய இடது காதில் சிவபெருமானுக்கு உரிய தோடும் வலது காதில் குண்டலமும் அணிந்திருக்கிறாள். இந்த அமைப்பு சிவனும் சக்தியும் வேறில்லை என்பதை பறைசாற்றும் வடிவமாக பார்க்கப்படுகிறது .கோனியம்மன் சன்னதியில் எதிரில் சிம்ம வாகனம் இருக்கிறது .கோனியம்மன் கோவிலின் தலவிருட்சமாக மகிழ மரம், அரசமரம், நாகலிங்க பூமரம் ஆகியவை இருந்தாலும் வேப்பமரம் ,வில்வமரம் போன்ற மரங்களும் இங்கே தேவ மரங்களாக வைத்து பாதுகாக்கப்படுகின்றன .