ஓணம் பண்டிகையின் வரலாற்றை சொல்லும் திருக்காட்கரை காட்கரையப்பன் கோவில்

ஓணம் பண்டிகை உருவான கதையோடு தொடர்புடைய திருக்காட்கரை அப்பன் கோவிலை பற்றி காண்போம்.

Update: 2023-08-29 16:30 GMT

கேரளாவில் கொண்டாடப்படும் முக்கியமான விழாக்களில் ஒன்று ஓனம் பண்டிகை. மகாவிஷ்ணு தன்னுடைய வாமன அவதாரத்தின் போது நடைபெற்ற புராணத்தின் அடிப்படையில் இந்த விழா கேரள மாநிலம் முழுவதும் வெகு விமரிசையாக நடைபெறும். கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகையின் வரலாறு சொல்லும் இடமாக திருக்காட்கரையப்பன் கோவில் விளங்குகிறது . இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.


மகாவிஷ்ணுவின் தசாவதாரம் என்று குறிப்பிடும் 10 அவதாரங்களில் வாமன அவதாரத்திற்கு உரிய தலமாக கேரள  மக்களால் வழிபடப்படும் ஆலயம் இது. அசுர குளத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் கேரளா நாட்டை ஆட்சி செய்து வந்த மகாபலி சக்கரவர்த்தி தன் மக்களின் மீது பற்று கொண்டவனாக இருந்தான். இந்த மன்னனை வாமன அவதாரம் எடுத்து வந்த பெருமாள் 3 அடி மண் கேட்டு பாதாள உலகத்திற்கு தள்ளிய இடத்தில் திருக்காட்கரை ஆலயம் அமைந்திருப்பதாக சிலர் செல்கின்றனர் .


சிலகாலத்திற்கு பின் கபில முனிவர் மகாவிஷ்ணுவின் வாமன தோற்றத்தை பார்க்க விரும்பினார். இதை அடுத்து அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற இறைவன் வாமனத் தோற்றத்தில் காட்சியளித்த இடமே இந்த ஆலயம் இருக்கும் பகுதி என்று வேறு சிலர் சொல்கிறார்கள். இந்த கோவிலில் கபில தீர்த்தம் உள்ளது. அந்த தீர்த்தத்தில் இருந்து எடுக்கப்படும் நீரைக் கொண்டே இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இந்த ஆலயத்தில் பெருமாள் வாமன அவதாரத் தோற்றத்தில் தெற்கு நோக்கி நின்ற நிலையில் காட்சியளிக்கிறார்.


சங்கு, சக்கரம் ,கதாயுதம் தாமரை தாங்கிய நான்கு கரங்களுடன் வீற்றிருக்கும் இத்தல இறைவன் திருக்காட்கரையப்பன் என்று அழைக்கப்படுகிறார். இறைவனின் திருநாமம் வாத்சல்யவல்லி என்பதாகும். இதற்கு பெருஞ்செல்வ நாயகி என்று பொருள். இந்த ஆலயத்தில் பகவதி அம்மன், சாஸ்தா , கோபாலகிருஷ்ணன் பிரம்ம ராட்ஷசன், எச்சி ஆகியோருக்கு தனி சன்னதிகள் அமைந்துள்ளன. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் திருக்காட்கரை என்ற இடத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. திருச்சூரிலிருந்து 23 கிலோமீட்டர் தூரத்திலும் இரிஞ்சாலக்குடா என்ற இடத்திலிருந்து 14 கிலோமீட்டர் தூரத்திலும் இருக்கிறது திருக்காட்கரை திருத்தலம்.

Similar News