வெற்றியை வாரி வழங்கும் விஜயதசமி பூஜை செய்ய சரியான நேரம் எது?

Update: 2022-10-05 00:15 GMT

ஒன்பது நாட்கள் நவராத்திரி முடிந்து, அம்பிகையின் நவ துர்கை அம்ச வெளிப்பாடு கொண்டாட்டங்கள் இன்றைய விஜயதசமியோடு நிறைவு பெறுகிறது. ஒன்பது நாட்கள் நடந்த யுத்தத்தின் முடிவில் தீயவை அழிந்து நல்லவை புலர்ந்ததன் அடையாளமாக, பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் மலைமகளாம் பார்வதி தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் அலைமகளாம் லட்சுமி தேவியையும், இறுதி மூன்று நாட்கள் கலைமகளாம் சரஸ்வதி தேவியையும் வணங்குவதல் வழக்கம். இந்த மூன்று அன்னையரும் ஒரு சேர இணைந்து அன்னை ஆதி பராசக்தியாக காட்சி தரும் தினமே பத்தாம் நாளாம் விஜயதசமி.

இந்த புண்ணிய நாளில் கல்வியெனும் ஞானத்தை படிக்க துவங்கும் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்வது வழக்கம். விஜய என்றால் வெற்றி என்று அர்த்தம் தசமி திதியில் வெற்றியை நிலைநாட்டியதால், நவராத்திரி தசமி அன்று வரும் இந்த விஜய தசமியில் தொடங்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும் என்பது ஐதீகம். அதுமட்டுமின்றி இது கலைமகளுக்கும், அலைமகளுக்கும், மலைமகளுக்கும் உகந்ததாக இருப்பதால் ஞானம் சார்ந்த செயல்களான கல்வி, கலை போன்றவற்றை தொடங்கவும், செல்வ வளம் பெருக வேண்டும் என்பதற்காக புதிய கணக்குகள், புதிய தொழில் தொடங்குவதும், மலைமகளின் அருள் வேண்டும் என்பதற்காக வீரம் சார்ந்த நிகழ்வுகளை தொடங்குவது வழக்கம்.

இந்த ஆண்டு தசமி திதி அக்டோபர் 4 ஆம் தேதி 2.20 மணிக்கே தொடங்கிவிடுகிறது. பின்னர் இந்த திதி அக்டோபர் 5 ஆம் தேதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது. எனவே புதிதாக ஏதும் தொடங்குபவர்கள் மற்றும் பூஜை செய்பவர்கள் அக்டோபர் 5 ஆம் தேதி காலை 10.45 மணி முதல் 11.45 வரையில் செய்வது உகந்ததாகும்.

தவிர்க்க இயலாத காரணங்களால் காலை பூஜை செய்ய முடியாதவர்கள் மாலை 4.45 மணிக்கு தொடங்கி 5.45 மணி வரையில் பூஜை செய்யலாம்.

நேரமும் காலமும் ஒருவித ஐதீகம் தான், கடவுளை நினைக்கவும் துதிக்கவும் நாளும் கிழமையும் ஏது? பக்தி நிறைந்த மனதுடன் எப்போது நாம் அன்னையை வணங்கினாலும் அவள் அருள் கிடைப்பது திண்ணம். அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துகள்

Tags:    

Similar News