கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் பெளர்ணமி நன்னாளில் கொண்டாடப்படுவதே கார்த்திகை தீபம். இதனை அண்ணாமலை தீபம் என்றும் அழைப்பர். திருவண்ணாமலையில் ஏற்றப்படும் ஜோதி தமிழகத்தின் ஒவ்வொரு இல்லத்திலும் தரிசிக்க முடியும் பொன்னாள் இது. சங்க காலம் தொட்டே இந்த கார்திகை தீபம் என்பது தமிழர்களின் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான கார்திகை தீபம் இன்று கொண்டாடப்படுகிறது. எல்லோரும் வீடுகள் தோரும் விளக்கேற்ற நல்ல நேரம் பார்ப்பது வழக்கம். நம் மரபின் படி நேற்றே பல வீடுகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டிருக்கும், அதனை தொடர்ந்து கொண்டாடப்படும் இன்றைய கார்த்திகை தீபத்திற்கான நேரம் குறிக்கப்பட்டுள்ளது.
இந்த தீபத் திருவிழா தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியாவின் பல மாநிலங்களில் கொண்டாடப்படுவது இவ்விழாவின் தனிச்சிறப்பு. தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஏன் உலகளாவிய வகையில் தமிழர் வசிக்கும் பல நாடுகளில் தீபம் ஏற்றப்படுவது வழக்கம்.
திரிக் பஞ்சாங்கத்தின் படி கார்த்திகை நட்சத்திரமானது இன்று காலை 8.38 மணிக்கு தொடங்கி நாளை காலை அதாவது டிசம்பர் 7 காலை 10:25 வரை நீடிக்கவுள்ளது. தீபமேற்றும் பழக்கம் சூரியன் மறைந்த பின் தொடங்குவது வழக்கம். அதன் படி இன்று மாலை சூரியன் மறைந்தபின் விளக்கேற்ற உகந்த நேரமாக இருக்கும்.
பொதுவாக கார்த்திகை தீபத்தன்று வீடுகள் தோறும் பூஜைகள் செய்து, கோலமிட்டு, வரிசையாக அகல் விளக்குகளை அடுக்கி தீபமேற்றுவது வழக்கம். ஒவ்வொரு எண்ணைக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. எண்ணெய், நல்லெண்ணை, நெய் என பல்வேறு வகையில் தீபமேற்றுவது நம் மரபு. அடிப்படையில் இருள் அழிந்து ஒளி பெருகுவதே இதன் தார்பரியம். நம் மனதிலும், நம்மை சுற்றியுள்ள இடத்திலும் இருள் எனும் எதிர்மறை அதிர்வுகள் அழிந்து நன்மை என்கிற நேர்மறை அதிர்வுகள் பெருகி வளரட்டும்.
குறிப்பாக இந்த தீபத்திருவிழா என்பது திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரின் கோவிலுடன் தொடர்புடையதாகும். மலையில் ஏற்றப்படும் தீபம் காண கோடிக்கணக்கான மக்கள் கிரிவலப்பாதையிலும் அண்ணாமலையார் கோவிலிலும் குவிந்து வருகின்றனர். அனைவரின் இல்லத்திலும் உள்ளத்திலும் அறியாமை எனும் இருளழிந்து நல்லொளி பெருக வாழ்த்துகள்.