திருமலை திருப்பதியில் களைகட்டும் பிரமோற்சவம் - கொடி ஏற்றத்துடன், பக்தர்கள் அலைமோத துவங்கியது

திருப்பதி திருமலையில் ஏழுமலையான் கோவிலின் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் கொலகாலமாக துவங்கி உள்ளது.

Update: 2022-09-28 05:45 GMT

திருப்பதி திருமலையில் ஏழுமலையான் கோவிலின் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் கொலகாலமாக துவங்கி உள்ளது.

திருப்பதி ஏழுமலையானுக்கு புரட்டாசி மாதம் வருடாந்திர பிரமோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. பிரம்மோற்சவத்தின் போது தினசரி காலை, இரவு என பல்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி மாட வீதிகளில் எழுந்தருளி சேவை சாதிப்பது வழக்கம். இந்த திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் கூடுவர், ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பிரமோற்சவத்தின் போது மாடவீதியில் வாகன சேவைகள் ரத்து செய்யப்பட்டது கோயிலுக்குள் வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.

இந்நிலையில் இந்த ஆண்டு பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளான நேற்று செவ்வாய் மாலை 5:45 மணி முதல் 6:15 மணி வரை லக்கினத்தில் கொடியேற்றம் நடந்தது. கொடியேற்றத்தின் போது ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சாமி கொடிமரத்தின் அருகில் எழுந்தருளினார்.

பின்னர் கொடி மரத்திற்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்னர் கொடி மரத்தில் உள்ள சிலைகளுக்கு விக்கிரகங்களுக்கு மஞ்சள் சாத்தி மலர்மாலை அணிவித்து நெய்வேத்திய படைக்கப்பட்டது. பின்னர் தர்ப்பைப் பொருட்களால் செய்யப்பட்ட கொடிகளும் கட்டப்பட்டன. ஏழுமலையானின் வாகனமான கருடனின் உருவத்தை மஞ்சள் நனைத்து பெரிய துணியில் இயற்கை வண்ணங்கால் வரைந்து அதை ஒரு வாகனத்தில் கட்டி அதனை மாடவீதியில் ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் பெரிய மாலையில் அந்த கருட கொடியை கட்டி அதை தர்ப்பை பொருட்களால் செய்த கயிறால் கொடிமரத்தில் அர்ச்சகர் ஏற்றினார்.

இவ்வாறு கொடியை ஏற்றி 33 முக்கோடி தேவர்களையும் பிரமோற்சவத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தனர். பின்னர் கற்பூர ஆரத்தி அளித்து நெய்வேத்தியம் படைக்கப்பட்டது. திருமலையில் பிரம்மோற்சவத்தின் முதல் வாகன சேவை என ஆதிசேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மாட வீதியில் எழுந்தருளினார். ஆதிசேஷன் விஷ்ணுவிற்கு மிகவும் நெருக்கமானவர் இராம அவதாரத்தில் லக்ஷ்மனாகவும், துவார யுகத்தில் பலராமனாகவும் விளங்கினார்.

திருமலை முழுவதும் வண்ண மின் விளக்குகளால் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு, அழகு மிளிர அலங்கரிக்கப்பட்ட கண்ணை பறிக்கும் விதத்தில் திருப்பதி-திருமலை ஜொலிக்கிறது.

Similar News