கன்னியாகுமரியில் வீற்றிருக்கும் கடல் திருப்பதி!
கன்னியாகுமரிக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டுவது போல விவேகானந்தர் கேந்திரா கடற்கரையில் கண்ணை கவரும் வகையில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்.
இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி எப்போதும் சிறப்புக்குரியது. முக்கடல் சங்கமிக்கும் இந்த ஊர் சிறந்த சுற்றுலா தளமாகவும் குமரி பகவதி அம்மன் வீற்றிருக்கும் இடம் என்பதால் பலரும் வந்து வணங்கும் வழிபாட்டுத் தலமாகவும் இரு வேறு தேவைகளை பூர்த்தி செய்கிறது. இங்கு ஏற்கனவே கடலின் நடுவே விவேகானந்தர் நினைவு மண்டபம், 133, அடி உயர திருவள்ளுவர் சிலை கடற்கரை ஓரமாக காந்தி நினைவு மண்டபம் உட்பட பல்வேறு சுற்றுலா தளங்களும் அமைந்துள்ளன.
பக்தர்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பட்ட மக்களையும் கவரும் வகையில் கடற்கரை ஓரமாக அமைந்திருக்கும் இந்த ஆலயம் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி கட்டிமுடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஆந்திராவில் ஏழு மலைகளால் சூழ்ந்த இடத்தில் திருப்பதி வெங்கடாசலபதி வீற்றிருப்பதால் அவரை ஏழுமலையான் என்று அழைக்கிறோம்.
அதுபோல கன்னியாகுமரியில் கடற்கரை ஓரமாக கடல் அலை ஓசைகளுக்கு அருகாமையில் வீற்றிருப்பதால் இத்தளத்தை கடல் திருப்பதி என்று பக்தர்கள் அழைக்கின்றனர். திருப்பதியை போல கன்னியாகுமரியில் திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்திருக்கும் சில காரணம் சொல்லப்படுகிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருமலையில் உள்ள திருப்பதி கோவில் உலக புகழ் பெற்றது. சாதாரண நாட்களில் கூட இந்த ஆலயத்திற்கு சில லட்சம் பக்தர்கள் சாமியை தரிசிக்கிறார்கள். அதுவே விழா காலங்களில் லட்சோப லட்சம் பக்தர்கள் திரள்வார்கள் .
திருப்பதி சென்று வந்தால் திருப்பம் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை நல்லபடியாக அமைவதாலும் வேண்டுதல் நிறைவேறுவதாலும் அங்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஒரு மாத உண்டியல் வருமானம் மட்டும் 100 கோடியை தாண்டுகிறது. கூட்டமும் கட்டுக்கடங்காமல் வருவதால் இந்த கோவிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்தியா முழுவதும் பல இடங்களில் திருப்பதியில் உள்ளதை போன்று கோவில் கட்ட முடிவு செய்தது. அந்த வகையில் உருவானது தான் கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்.