பூலோக வைகுண்டமாக ஜொலிக்கும் திருப்பதி!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி பூலோக வைகுண்டமாக அழகுடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறது. 10 நாட்கள் வரையில் கோலாகலமாக திருவிழா நடைபெற்று பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-12-23 06:00 GMT

திருமலை திருப்பதி கோவிலுக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தால் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் காரணமாகவே தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். ஏழை பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அருள்பாலித்து வருகிறார் எம்பெருமான் ஏழுமலையன். ஏற்றங்கள் தரும் வளமான வாழ்விற்கும் எண்ணிய காரியங்கள் இனிதே நிறைவேறவும் ஏழுமலையானை தரிசித்து வரம் பெற்றோர் ஏராளம். வாழ்வில் ஒரு முறையேனும் திருப்பதி சென்று தரிசித்து விட மாட்டோமா என்று ஏங்கும் உள்ளங்கள்  எத்தனையோ உண்டு.


இங்கு புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழா போல வைகுண்ட ஏகாதசி விழாவும் 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு திருமலை திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் காரணமாகக் கோயில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 10 டன் அளவுள்ள மலர்கள் மற்றும் பழங்கள் ஆகியவை கொண்டு கோயிலில் வெளிப்புறம், உள்புறம், பலிபீடம், கொடிமரம் மற்றும் வைகுண்ட வாசல் போன்ற இடங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் பூலோக வைகுண்டமாக ஜொலிக்கிறது ஏழுமலையான் ஆலயம்.


இன்று நள்ளிரவு 1.45 மணிக்குப் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும் சொர்க்கவாசல் வழியாகச் சென்று தரிசனம் செய்தனர். திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி நாளில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு வரும் ஜனவரி 1ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான இலவச டோக்கன்கள் 9 மையங்களில் 90 கவுண்ட்டர்களில் விநியோகம் செய்யப்பட உள்ளதாக திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.



Similar News