வாஸ்து பரிகார தலமாக விளங்கும் திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில்!
நாற்பரமும் அகலை சூழல் அமைந்திருக்கும் இந்த கோவிலில் அருளும் இறைவன் அக்னேஸ்வரர் இறைவி கருந்தார் குழலி சூலிகாம்பாள் என்ற பெயரும் இறைவிக்கு உண்டு.
தேவாரப் பாடல் ஆசிரியர்களில் ஒருவரான சுந்தரர் சிவபெருமானிடம் மிகுந்த பக்தி கொண்டவர். சிவபெருமானுக்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருநாளில் பெருவிழா நடத்துவது சுந்தரரின் வழக்கம். அந்த விழாவில் மகேஸ்வர பூஜை செய்து சிவனடியார்களுக்கு ஆடை அணிவித்து அமுதூட்டி வணங்குவார். இந்த புனித சேவையில் சுந்தரரின் மனைவி பறவை நாச்சியார் அம்மாள் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்து கொள்வார்.
இவ்வாறு இவர்கள் வழக்கம் போல நடத்தும் இந்த விழாவில் ஒரு சமயம் சுந்தரருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. என்ன செய்வது யாரிடம் கேட்பது என தெரியாமல் தவித்தபடியே பயணித்தார் சுந்தரர். பல கோவில்களுக்கு சென்று இறுதியில் திருப்புகலூருக்கு வந்து சேர்ந்தார். அங்கே கோவிலில் திருப்பணி நடந்து கொண்டு இருந்தது. எங்கு பார்த்தாலும் செங்கற்களும் மணலும் குவித்து வைக்கப்பட்டிருந்தன. நீண்ட தூரம் பயணம் செய்த காரணத்தால் அவருக்கு களைப்பு ஏற்பட்டது. இதை எடுத்து அவர் திருப்புகலூரில் சற்று ஓய்வு எடுத்தார்.
மணலை படுக்கையாக்கினார். செங்கற்களை தலையணையாக்கி துயில் கொண்டார். அவர் தூங்கினாலும் கூட அவரது சிந்தனையோ மகேஸ்வர பூஜையை எப்படி நடத்துவது என்பதிலேயே இருந்தது. அப்போது அவரது கனவில் "பங்குனி உத்திரத்துக்கு காசு எங்கே?" என்று மனைவி கேள்வி கேட்பது போல் இருந்தது. உடனே அவர் கண்விழித்து பார்த்தபோது அவர் தலையணைக்கு பயன்படுத்திய செங்கற்கள் தங்க கட்டிகளாக மாறி இருந்ததை கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்தார். என்ன இறைவனின் மகிமை என ஆனந்தப்பட்டார்.
இந்த சம்பவத்துக்கு பின் இத்தலம் வாஸ்து பரிகாரத்தலமாக விளங்கத் தொடங்கியது. இன்றும் புதிதாக வீடு கட்டுபவர்கள் திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவிலுக்கு வந்து அக்னீஸ்வரர் சன்னதிக்கு நேர் எதிரில் மூன்று செங்கற்களை வைத்து பூஜை செய்து இறைவனை வழிபட்டு எடுத்து செல்கின்றனர். இவ்வாறு பூஜை செய்து மூன்று செங்கற்களை வடகிழக்கு தென்கிழக்கு பகுதிகளிலும் பூஜை அறையிலும் வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வீடு கட்டும் பணி எந்தவித தடையும் இன்றி நாம் விரும்பியபடி விரைவில் வீட்டை கட்டி முடிக்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை .இந்த வாஸ்து பூஜை இத்தலதின் அனைத்து நாட்களிலும் செய்யப்படுகிறது.