UNCCD COP 15 மாநாட்டில் மண் அழிவை தடுக்க '3 - நிலை தீர்வை' சமர்ப்பித்த சத்குரு!
‘ஒற்றை புள்ளி செயல் திட்டம்’ உருவாக்க 195 நாடுகளுக்கு வேண்டுகோள்!
மண் வளத்தை பாதுகாப்பதற்காக 100 நாட்களில் 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள சத்குரு, ஐ.நாவின் பாலைவனமாதலை தடுக்கும் அமைப்பின் சார்பில் ஐவரி கோஸ்ட் நாட்டில் நடைபெற்று வரும் COP 15 மாநாட்டில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். 195 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாட்டில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்கு மண்ணில் குறைந்தப்பட்சம் 3 முதல் 6 சதவீதம் கரிம வளத்தை உறுதி செய்வதற்கான தீர்வை சமர்ப்பித்தார்.
அதில் சத்குரு கூறியிருப்பதாவது:
உலகில் உள்ள அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளும் COP 15 மாநாட்டில் ஒன்று கூடி இருப்பது ஒரு முக்கியமான வாய்ப்பு. இதன்மூலம் உலகம் முழுவதும் உள்ள விவசாய நிலங்களின் மண் சீரழிவை மாற்றியமைக்கவும், மண் அழிவின் விளிம்பில் இருந்து மனித இனத்தை மீட்கவும் அரசாங்கங்களின் கொள்கை உருவாக்க முயற்சிகளை இரட்டிப்பாக்க முடியும்.
மண் வளப் பாதுகாப்பை பெரிய அளவில் கொண்டு செல்வதற்கு மக்களின் மனங்களில் அதை ஆழமாக பதிய வைக்க வேண்டும். நாம் சந்தித்து வரும் சூழலியல் பிரச்சினைகளை மிக எளிமையான வழிகளில் மக்களுக்கு புரியும்படி விளக்க வேண்டும். பிரச்சினைக்கான தீர்வுகளை எளிமையான வழிகளில், சுருக்கமாக ஒற்றை கவனத்துடன் கொண்டு செல்வதன் மூலமே வெற்றிகரமான மக்கள் இயக்கத்தை உருவாக்க முடியும்.
சிக்கலான அறிவியல் விஷயங்களை மக்களுக்கு புரியும்படி எளிய முறையில் கொண்டு செல்லாததன் விளைவாக பல சுற்றுச்சூழல் முயற்சிகள் தோல்விகளை சந்தித்ததை வரலாற்றில் பார்க்க முடியும். 1987-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட 'மோண்ட்ரியல் புரோட்டோகால்' (Montreal Protocol) இப்போது வரை ஒரு வெற்றிகரமான சர்வதேச உடன்படிக்கையாக உள்ளது. அதற்கு காரணம், ஒரே ஒரு விஷயத்தை செய்வதன் மூலம் ஓசோன் படலம் பாதிப்புக்கு உள்ளாவதை தடுக்க முடியும் என்ற ஒற்றை நோக்கம் அதில் வலியுறுத்தப்பட்டது.