பாதாள செம்பு முருகன் கோவிலா? திடீரென பரபரப்பாக பேசப்பட்ட இத்தலம் எங்கு உள்ளது?
திண்டுக்கல் மாவட்ட சுற்றுவட்டார மக்கள் அனைவரும் சமீபத்தில் படையெடுத்துச் செல்லும் ஒரு கோவிலாக அமைந்துள்ளது பாதாள செம்பு முருகன் கோவில்.
திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற பழனி மலை முருகன் திருக்கோவில் உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்ல கேரளா, ஆந்திரா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களிலும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் எப்போதும் முருகனை தரிசக்க வந்து குவிந்து கொண்டே இருக்கும். பழனி முருகன் கோவில் அளவுக்கு இல்லை என்றாலும் திருமலைக்கேணி - மலைக்கேணி முருகன் கோவிலும் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலம். அம்மன் கோவில்களில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், அகரம் முத்தாலம்மன் என இப்படி விரல் விட்டுச் சொல்லக் கூடிய கோவில்கள் இன்னமும் அதே பாரம்பரிய உயிர்ப்புடன் திருவிழாக்களை நடத்திக் கொண்டுதான் இருக்கின்றன.
அதேநேரத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 40, 50 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் அல்லது 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை சொல்லி வைத்தால் போல திடீர் திடீரென புதிய புதிய ஆன்மீக தலங்கள் உருவெடுப்பதும் பின்னாளில் அவை கண்டு கொள்ளப்படாமல் போவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அய்யலூர் பேசும் பழனி ஆண்டவர் முருக கோவில் புகழ் பெற்றது. இத்தனைக்கும் இதே அய்யலூர் பேசும் பழனி ஆண்டவர் முருகன் கோவிலுக்கு எதிராகத்தான் புகழ்பெற்ற வண்டி கருப்பண்ண சுவாமி கோவில் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்ட மக்கள் புதிய வாகனங்களை வாங்கினால் கருப்பண்ண சுவாமி கோவிலுக்கு கிடா வெட்டி விருந்து வைப்பது இன்றளவும் தொடரும் ஒரு வழிபாட்டு முறை.
இந்த வண்டி கருப்பண்ண சுவாமியை விட ஏராளமான பக்தர்களை பேசும் பழனி ஆண்டவர் முருகன் கவர்ந்திழுத்திருந்தார். அதுவும் பழனி தைப்பூசத்தின் போது ஒரு தேரை முதுகில் கட்டி இழுத்தபடியே பாதயாத்திரையாக அவர் செல்லும் போது வழியெங்கும் ஊர் ஊராக பக்தர்கள் திரண்டு வந்து ஆசி பெறுவது வழக்கம். பின்னாளில் மெல்ல மெல்ல பேசும் பழனி ஆண்டவர் கோவில் பேசுபொருளற்றதானது. பெரிய பேசும் பழனி ஆண்டவர் மறைந்து சின்னவர் வந்தார்.
இந்த வரிசையில் கசவனம்பட்டி மவுன குரு சுவாமிகள் கோவில், அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் தொடங்கி நேற்று வரை கணக்கம்பட்டி சுவாமிகள் கோவில் வரை இப்படியான புதிய புதிய ஆன்மீக தலங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இந்த வகையில் இப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் எங்கு திரும்பினாலும் பாதாள செம்பு முருகன் கோவில் குறித்த பேச்சுதான். கூட்டம் கூட்டமாக மொத்தமாக கிளம்பி போய் வழிபடுகின்றனர். பாதாள செம்பு முருகன் கோவில் என்ற பலகையுடனான பேருந்தையும் இன்று கவனிக்க முடிந்தது.