அயோத்தி ராமர் கோவிலுக்காக ஒரே நாளில் வடிவமைக்கப்பட்ட உற்சவர் வீதி உலா பல்லக்கு!
அயோத்தி ராமர் கோவிலுக்கு உற்சவர் வீதி உலா பல்லக்கு ஒரே நாளில் மாமல்லபுரத்தில் வடிவமைக்கப்பட்டது.
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் விஸ்வ இந்து பரிஷத்தின் ராமஜென்ம பூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை சார்பில் தரைத்தளத்தில் இருந்து மூன்று அடுக்குகளை கொண்ட ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. வருகிற 22-ஆம் தேதி இந்தியாவே உற்றுநோக்கும் வகையில் பிரம்மாண்டமான முறையில் கும்பாபிஷேக விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகளை உத்தரபிரதேச அரசு செய்து வருகிறது.
இந்த நிலையில் கோவில் நுழைவு வாயில் முன் கதவு ,ராமர் சீதை கருவறையின் கதவுகள் மற்றும் லட்சுமணன் ஆஞ்சநேயர் உள்ளிட்ட சன்னதிகள் என அனைத்திற்கும் 48 மரக்கதவுகளை அலங்கார அலங்கார சிற்பங்களுடன் மாமல்லபுரம் அரசினர் சிற்பக்கலை கல்லூரியில் பட்டம் பெற்ற மத சிற்பக் கலைஞர் ரமேஷ் ஸ்தபதி ஏற்கனவே வடிவமைத்து பொருத்தியுள்ளார். இந்த நிலையில் கும்பாபிஷேக தினமான 22-ஆம் தேதி ராமர் கோவில் உற்சவத்தில் பஞ்சலோக ராமர் சிலை வீதி உலா வருவதற்காக ஒரே நாளில் பல்லக்கை வடிவமைத்து அனுப்பி வைக்க வேண்டும் என்று ராமஜென்ம பூமி தீர்க்க சேத்ரா அறக்கட்டளையினர் ஸ்தபதியிடம் அறிவுறுத்தியிருந்தனர்.
இதை அடுத்து ஸ்தபதி ரமேஷ் உடனடியாக அதற்கான மாதிரி வரைபடம் தயார் செய்து ஒரே நாளில் மூன்று அடி நீளம் 2 அடி அகலத்தில் பர்மா தேக்கு மரத்தில் ராமர் உற்சவமூர்த்தி வீதி உலாவுக்கான பல்லக்கை வடிவமைத்தார். இவரது தலைமையில் ஆறு சிற்ப கலைஞர்கள் அழகிய கலைநயத்துடன் அந்த தேக்கு மர பல்லக்கில் இறக்கைகளை விரிக்கும் கோலத்தில் அன்னப்பறவைகள், இரண்டு யானைகள் காலை மடக்கி படுத்திருக்கும் காட்சி, யாழிகள் அலங்கார பூக்கள் என அந்த பல்லக்கில் மர சிற்பங்கள் காட்சி தருகின்றன.
கும்பாபிஷேகம் நடைபெறும் வருகிற 22 ஆம் தேதி அன்று பஞ்சலோக இராமர் சிலை இந்த பல்லக்கில் கோவில் வளாகத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலிக்க உள்ளார். ஒரே நாளில் வடிவமைக்கப்பட்ட இந்த பல்லக்கு மாமல்லபுரத்திலிருந்து வேன் மூலம் ஐதராபாத் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விமான மூலம் அயோத்திக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதற்கிடையில் ஏற்கனவே மாமல்லபுரம் மத சிற்பக் கலைஞர் ரமேஷ் ஸ்தபதி வடிவமைத்துள்ள மூலஸ்தான வாசல் உள்ளிட்ட 48 அலங்கார மர கதவுகளில் 13 மர கதவுகளில் தலா 100 கிலோ எடை உள்ள தங்முலாம் பூசப்பட்ட தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.ராமர் உற்சவர் சிலை வீதி உலா பலக்கினை ஒரே நாளில் தத்ரூமாக வடிவமைத்து கொடுத்த ரமேஷ் ஸ்தபதிக்கு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக கமிட்டியினர் வாழ்த்து தெரிவித்தனர்.
SOURCE :DAILY THANTHI