நீண்ட ஆயுளை வழங்கும் பருத்திப்பட்டு வாயு லிங்கேஸ்வரர்!
வாயுலிங்க திருக்கோவிலான விருத்தாம்பிகை சமேத வாழவந்த வாயுலிங்கேஸ்வரர் திருக்கோவில் ஆவடிக்கு அருகில் பருத்திப்பட்டு என்ற பகுதியில் அமைந்துள்ளது.
ஒரு சமயம் திருமாலை தரிசிப்பதற்காக வைகுண்டம் சென்றார் வாயு பகவான். அது திருமால் துயில் கொள்ளும் நேரம் என்பதால் ஆதிசேஷன் வாயு பகவானை உள்ளே அனுமதிக்கவில்லை .இதனால் அவர்கள் இருவருக்குள்ளும் யார் பெரியவர் என்று போட்டி உண்டானது. ஆதிசேஷன் மலையை அழுத்தி பிடிக்க வாயுபகவான் தன் பலம் கொண்ட மட்டும் அந்த மலையை ஊதி தள்ளினார். இதில் அந்த மலை பல துண்டுகளாக சிதறி பல இடங்களில் விழுந்தது. துயில் களைந்து எழுந்த திருமால் விஷயத்தை அறிந்து ஆதிசேஷனையும் வாயு பகவானையும் பூலோகத்தில் பிறக்க சாபமிட்டார்.
இதன் விளைவாக பூலோகத்திற்கு வந்த வாயு பகவான் இப்பகுதியில் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்து வந்தார். சூரியனின் கதிர்கள் லிங்கத்தின் மேல்பட்டு பிரகாசிக்க இப்பகுதி 'பரிதிப்பட்டு' என்று அழைக்கப்பட்டது .அதுவே மறுவி 'பருத்திப்பட்டு'என்று ஆனதாக கூறப்படுகிறது .கோவிலுக்கு முன்னால் திருக்கோவில் நுழைவுவாசல் காணப்படுகிறது .இத்தலம் ராஜகோபுரம் இன்றி சுற்றுச்சூவருடன் காட்சி தருகிறது. கோவிலுக்குள் நுழைந்தால் இடதுபுறத்தில் நால்வர் சன்னதி உள்ளது. மூலவரின் கருவறைக்கு முன்பாக பால விநாயகர் , பாலமுருகன் ஆகியோருக்கு சிறிய சன்னதிகள் இருக்கின்றன .
இவ்வாலய அம்பாளின் திருநாமம் விருத்தாம்பிகை என்பதாகும். வழக்கமாக தெற்கு திசை நோக்கி அருளும் அம்பாள் இத்தலத்தில் வழக்கத்திற்கு மாறாக கிழக்கு நோக்கிய திசையில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாள். இங்கு பிரதோஷ வழிபாடு, மகா சிவராத்திரி வழிபாடு, பௌர்ணமி பூஜை ,சங்கடகர சதுர்த்தி விழா, கிருத்திகை தினத்தில் சிறப்பு வழிபாடு, தேய்பிறை அஷ்டமி, பங்குனி உத்தரம் முதலான விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இறைவன் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் கண் திருஷ்டி நீங்கும்.