விட்ட வாசல் 'முனீஸ்பரர்'- புராணம் சொல்லும் கதை என்ன?
கோவில் நகரமான மதுரை மாநகரின் மையத்தில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி காவல் தெய்வமாக நான்கு திசையிலும் முனீஸ்வரர் அருள் பாலித்து கொண்டு இருக்கிறார்.
விருத்திராசுரன் என்னும் அரசன் தேவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்தான். அவனை கொல்ல தேவர்களின் தலைவனான இந்திரனால் முடியவில்லை. இதன் காரணமாக இந்திரன் திருமாலை சரணடைந்து வேண்டினான். அதற்கு திருமால் "தவ வலிமை மிக்க ததீசி முனிவரின் முதுகெலும்பை பெற்று அதை ஆயுதமாக பயன்படுத்தினால் விருத்தி ராசுரனை வெல்ல முடியும்" என்றார்.
இதை அடுத்து அந்த முனிவரின் உதவியுடன் இந்திரன் அசுரனை கொல்லச் சென்றான். ஆனால் அப்போது அசுரன் தவம் செய்து கொண்டிருந்தான். இதை பார்த்த இந்திரன் தன் முடிவை மாற்றாமல் தவம் செய்து கொண்டிருந்த அசுரனை கொன்று விட்டான். தவம் செய்து கொண்டிருந்த அசுரனை கொன்றதால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது. இந்த தோஷத்தில் இருந்து விடுபட தன் குலகுருவான பிரகஸ்பதியின் உதவியை நாடினான் தேவேந்திரன். பிரகஸ்பதியோ "பூலோகத்தில் உள்ள சிவ தலங்களுக்கு சென்று வா" என்று அறிவுரை வழங்கினார்.
அதன் பேரில் கேதாரம், காசி, காஞ்சிபுரம் சென்று மதுரைக்கு வந்து சேர்ந்தான். அங்கு சொக்கநாதரை தரிசனம் செய்த போது இந்திரனுக்கு தோஷம் நீங்கியது. தோஷம் விட்ட இடம் தான் 'விட்ட வாசல்' அந்த விட்ட வாசல் மண்டபத்தில் தான் சிவன் அம்சமாக ஜோதி வடிவில் முனீஸ்பரர் வீற்றிருக்கிறார். 'பரர்' என்றால் வேண்டியதை உடனே கொடுப்பவர் என்று சொல்வார்கள். இதன் காரணமாக இங்குள்ள காவல் தெய்வத்துக்கு முனீஸ்பரர் என பெயர் வந்ததாம்.
அதுமட்டுமின்றி மதுரையை ஆளும் மீனாட்சி அம்மனின் வலது கண் பார்வையில் எழுந்தருளிய ஒரே காவல் தெய்வம் இந்த முனீஸ்பரர். இங்கு கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இங்குள்ள முனீஸ்பரர் சைவம். இதனால் இவருக்கு நெய்வேதியமாக சர்க்கரை பொங்கல் படைக்கிறார்கள். குழந்தை பேறு, கடன் பிரச்சனை, வீட்டுமனை வாங்க என தங்களின் வேண்டுதலுக்கு கோவிலில் அகல்விளக்கு ஏற்றுவது ஐதீகம் .