குழந்தைகளுக்கு முதன் முதலில் சோறூட்டுகையில் அன்னபிரசன்னம் செய்வது ஏன்?

Update: 2021-12-22 00:30 GMT

நமது கலாச்சாரத்தில் எந்த ஒரு துவக்கத்தையும் கொண்டாட்டம் மிக்கதாக ஆன்மீகத்தன்மையுடன் செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர். அந்த அடிப்படையில் தான் குழந்தைகளுக்கு செய்யப்படும் அன்னபிரசன்னம் எனும் நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது. சமஸ்கிருதத்தில் இதன் பெயர் அன்னம் துவங்குதல் என்பதாகும்.

பிறந்த நாள் தொட்டு, தாயின் பால் மற்றும் இதர நீர் ஆகாரங்களை உண்டு வந்த குழந்தை முதன் முதலாக திடமான உணவினை உட்கொள்ளும் போது அதற்குரிய சடங்குகள், சம்பிர்தாயங்கள் மற்றும் வழிபாடுகள் செய்யப்படுவதே அன்னபிரசன்னம் எனப்படுகிறது. நம் நாடு பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கியது ஆனால் பாரம்பரியம் மாறுவதில்லை. இந்த ஒற்றை சடங்கை ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பெயர் கொண்டு அழைக்கின்றனர். கேரளாவில் இந்நிகழ்வை "சோறுண்ணு " என்கிறார்கள். வங்காளத்தில் "முக்கே பாத் " என்கிறார்கள்.

ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த அன்ன்பிரசன்னம் காலம் முன்னுக்கு பின் சிறிது வேறுபட்டாலும் பெரும்பாலும் குழந்தையின் 6 ஆம் மாதத்தில் செய்யப்படும் சடங்காகும் இது. இந்த மாற்றம் குழந்தைகளிடம் இயல்பாக ஏற்படும் ஒன்று. ஆறு மாதம் கடந்த குழந்தை திடமான பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதை கடித்து பார்க்க ஆர்வம் கொண்டிருக்கும். சமயத்தில் அதன் கை விரல்களையே கூட அவை கடித்து கொள்வதும் உண்டு. இந்த மாற்றத்திற்குரிய காலகட்டத்தை தான் நம் முன்னோர்கள் நெறிப்படுத்தி, முறைப்படுத்தி ஒரு சடங்காக வழங்கியுள்ளனர்.

இந்த நிகழ்வின் போது, ஒரு குறிப்பிட்ட கோவிலையோ அல்லது இடத்தையோ தேர்வு செய்வர். அந்நாளில் குழந்தைக்கு புத்தாடை உடுத்தி குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களை அழைத்து வாழ்த்துகள், பரிசுகளுடன் குழந்தைக்கு முதல் உணவை வழங்குவார்கள். அதுமட்டுமின்றி குழந்தையின் முன் சில பொருட்கள் வைக்கப்படும் உதாரணமாக, பேனா, புத்தகம், வெள்ளி போன்றவை குழந்தை எதை எடுக்கிறதோ அது குறித்த சில அபிப்ராயங்கள் சொல்லப்படுவது வழக்கம்.

இந்த சடங்கின் தரதார்பரியம் யாதெனில், குழந்தையின் முதல் உணவு சுத்திகரிக்கப்படுகிறது. மற்றும் தூய்மை என்பது குழந்தையின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு எத்தனை முக்கியம் என்பது உணர்த்தப்படுகிறது. உணவின் முக்கியத்துவத்தை குழந்தையின் முதல் உணவின் போதே சேர்த்து ஊட்டப்பட்கிறது. உணவு என்பது உடலின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல மனதின் வளர்ச்சிக்கும் என்பது உணர்த்தப்படுகிறது. இந்த உணவை நல்கிய இறைவனுக்கும் இயற்கைக்கும் நன்றி சொல்லி, இறைவனுக்கும் இயற்கைக்கும் முதலில் அர்பணித்து பின் குழந்தை தன் முதல் நெல்லை உட்கொள்வதாய் இந்த சடங்கு வடிவமைக்கபட்டுள்ளது.

Tags:    

Similar News