பூனை குறுக்கே சென்றால் ஆகாது என்பது மூடநம்பிக்கையா? அதற்கான காரணம் என்ன ?

Update: 2021-11-13 00:30 GMT

மூட நம்பிகைகள் என்று சொல்லப்படும் அனைத்தும் வெறும் மூட நம்பிகைகள் தானா? இல்லை. நம்முடைய முன்னோர்கள் எதையும் வெறும் வாய் வார்த்தைக்காக சொல்லவில்லை அனைத்தையும் ஆராய்ந்தே அதன் அறிவியல் காரணங்களை புரிந்து கொண்டே சொன்னார்கள்.

உதாரணமாக, ஒரு காரியத்திற்கு செல்கிற போது பூனை குறுக்கே சென்றால் அது அபசகுனம் என்பார்கள். ஆனால் ஏன் எதற்கு என்று காரணம் தெரியாது. ஒரு கட்டத்தில் இது மூட நம்பிக்கை என்கிற எண்ணம் நமக்குள் வருகிறது. ஆனால் இதற்கு பின்பு இருக்கும் காரணமே வேறு. முந்தைய காலங்களில் இன்று இருப்பதை போன்ற வாகன வசதிகள் இல்லை. கார், இருசக்கர வாகனம் என இன்று இருக்கும் செளகரியங்கள் அன்று இருக்கவில்லை.

அப்போது இருந்ததெல்லாம் மாடுகள் மற்றும் குதிரைகள் பூட்டப்பட்ட வண்டி. அதுமட்டுமின்றி அப்போது மின்சார வசதியும் இருந்திருக்கவில்லை. இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் பூனையின் கண்களை சாதாரண நாட்களில் பார்த்தாலே ஒளிர்ந்து மிளிரும் தன்மை கொண்டதாக இருக்கும். சிந்தித்து பாருங்கள், இரவு நேரம், மின்சாரம் இல்லை அப்போது ஒரு பூனை சாலையை கடக்கிற போது அதன் கண்கள் மட்டும் ஒளிரும், ஆங்கிலத்தில் glaring என்போம். இந்த ஒளியானது மாடுகளுக்கும், குதிரைகளுக்கு அச்சத்தை தரக்கூடியது. எனவே இந்த ஒளியை திடீரென அவை எதிர்கொண்டால் நிலைகுலைந்து வண்டி கவிழும் அபாயம் அந்நாளில் இருந்தது. இதனாலேயே பூனை சாலையின் குறுக்கில் செல்வது உகந்தது அல்ல என்பார்கள். இதுவே மருவி இன்று வரை நீடித்து விட்டது எனலாம்.

இது போன்ற பல உதாரணங்கள் நம்மிடையே உண்டு. வீட்டின் முன்பு எலும்பிச்சை மற்றும் மிளகாயை கட்டி தொங்க விடுகிறோம். இது நம்மை கண் திருஷ்டியில் இருந்து காக்கிறது என்பது நம்பிக்கை. அடிப்படையில் எலும்பிச்சை, மஞ்சள் மற்ரும் மிளகாய் போன்றவை கிருமி நாசினிகளாக செயல்படக்கூடியவை. எனவே இவற்றை வாசலில் கட்டுகிற போது, வீட்டினுள் எந்தவித கிருமிகளும் அண்டாது என்பது அதன் பொருள்.

மாலையில் நகம் வெட்டக்கூடாது என்பதும் முன்பு சொன்ன காரணங்களை போன்றது தான். இரவு அல்லது மாலை நேரத்தில் நகத்தை வெட்டுகிற போது, மின்சாரம் இல்லாத காரணத்தால் முந்தைய காலங்களில் கைகளை காயப்படுத்தி கொண்டார்கள். எனவே தான் மாலையில் நகத்தை வெட்ட வேண்டாம் என சொல்லப்பட்டது.

இது போல காலத்திற்கு ஏற்ப சொல்லப்பட்ட சில பழக்கங்கள், இன்று வரை தொடர்கிறது. அதற்கான காரணம் நமக்கு புரியாமல், தொடர்ந்து கடைப்பிடித்து மட்டுமே வருவதால் அவற்றை எளிதாக மூட நம்பிக்கை என்று கடந்து விடுகிறோம். ஆராய்ந்து பார்த்தால் அர்த்தம் புரியும்.

 Image : Istock

Tags:    

Similar News