அஷ்டமி, நவமியில் நற்காரியங்களை தவிர்ப்பது ஏன் ?

அஷ்டமி ,நவமி மற்றும் கரிநாள் அன்று நற்காரியங்கள் செய்வது தவிர்க்கப்படுகிறது .

Update: 2022-09-07 06:45 GMT

அஷ்டமி கிருஷ்ணர் பிறந்த திதி நவமி ராமர் பிறந்த திதி. இருப்பினும் இந்த திதிகளில் எந்த நற்காரியங்களையும் யாரும் தொடங்குவதில்லை.அதோடு கரிநாள் என்ற நாளிலும் நற்காரியங்கள் செய்யப்படுவதில்லை. இந்த மூன்று தினங்களிலும் தொடங்கும் காரியங்கள் விரைவில் முடிவுக்கு வராது. தொடர்ந்து கொண்டே போகும் என்று சொல்கிறார்கள். அதற்கான காரணங்களை பார்ப்போம் .

அஷ்டமி:

கோகுல அஷ்டமி திதியில் கிருஷ்ணர் அவதரித்தது அனைவருக்கும் தெரிந்ததே. அவர் அந்தத் திதியில் பிறந்த காரணத்தால் அவர் எண்ணற்ற கஷ்டங்களை அனுபவித்தார். அவதார புருஷன் என்பதால் அவற்றை சமாளித்தார் .இறுதியில் வெற்றி பெற்றார். எனவேதான் அஷ்டமி திதிகளில் சுபகாரியங்கள் ஆன திருமணம் ,வீடு குடிபுகுதல், சொத்து வாங்குதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஆனால் இந்நாள் தீட்சை பெறுவது ,மந்திரங்களை ஜெபிப்பது, ஹோமங்கள் உள்ளிட்ட தெய்வீக காரியங்களுக்கு உகந்த நாளாகும். குறிப்பாக செங்கல் சூலைக்கு நெருப்பு மூட்ட, எதிரிகள் மீது வழக்கு தொடுக்க, ஆயுதங்கள் பிரயோகிக்க, எதிரி நாட்டின் மீது போர் தொடுப்பது போன்ற செயல்களுக்கு அஷ்டமி திதி   ஏற்ற திதியாகும்.

நவமி:

அமாவாசை நாளுக்கும் பவுர்ணமி நாளுக்கும் அடுத்துவரும் ஒன்பதாவது நாள் நவமி ஆகும். இந்த திதியில் தான் ராமபிரான் அவதரித்தார். அவர் அரியணை ஏற்கும் நேரத்தில் காட்டிற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் சீதையைப் பிரிந்து அவர் பட்ட துயரங்கள் சொல்லில் அடங்காதவை .இதன் காரணமாகவும் நவமி திதியை பலரும் நற்காரியங்கள் செய்ய தவிர்க்கிறார்கள்.ஆனால் இந்த திதியும் தெய்வீக காரியங்களுக்கு ஏற்ற நாளாகும்.


பொதுவாக அஷ்டமி ,நவமி நாட்களில் செய்யும் காரியம் இழுபறியாக இருக்கும். அஷ்டமி, நவமி  திதிகள் எதிர்மறையான எண்ணங்களைத் தோற்றுவிக்கும்.

கரிநாள் :

இந்த நாளைப் பற்றி அறிந்து கொள்ள முதலில் திதி, நட்சத்திரக் கணக்கு பற்றி அறிந்து கொள்ள வேண்டும். சந்திரனை நெருங்கக் கூடிய பாகையை திதி என்றும் அதற்கு எதிரே உள்ள பாகையை நட்சத்திர கணக்கு என்றும் கூறுவர். குறிப்பிட்ட திதி ,நட்சத்திரம் அமையும் நாளில் குறிப்பிட்ட கிழமை வந்தால் அது கரி நாளாக கருதப்படுகிறது. பொதுவாக கரி நாளன்று நல்ல காரியங்களைத் தொடங்கினால் அது விருத்தியை தராது என்பார்கள். இனி தொடரக் கூடாது என்று நாம் நினைக்கும் காரியங்களை இந்த கரிநாளில் செய்யலாம் .குறிப்பாக கடனை திருப்பிச் செலுத்துதல், அன்றைய தினம் கடனை அடைத்தால் மீண்டும் கடன் வாங்கும் நிலை வராது .



 


Similar News