பழையன கழிந்து, புதியன புலரும் போகி திருநாளில் பழையவற்றை எரிப்பது ஏன்?

பழையன கழிந்து, புதியன புலரும் போகி திருநாளில் பழையவற்றை எரிப்பது ஏன்?

Update: 2021-01-13 05:30 GMT

மார்கழியின் கடைசி நாளை அதாவது தை மாதத்தின் முதல் நாளை போகி என தமிழ் மக்கள் கொண்டாடுவது வழக்கம். இந்த பண்டிகை தென்னிந்தியாவில் அதாவது ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் போகி என்றும், வட இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப்பில் லொஹரி என்றும் கொண்டாடப்படுகிறது.

அடிப்படையில் அறுவடையை கொண்டாடும் ஒரு நாள். இந்த நாளினை பழையதை நீக்கி புதியதை புகுத்தி நேர்மறை அதிர்வுகளுடன் ஒரு புதிய காலம் துவங்குவதை குறிக்கும் நாள். இதனை வெறுமனே பொருள் தன்மையில் பழைய பொருட்களை எரிந்து புதிய பொருட்களை வாங்குதல் என்ற அளவில் புரிந்து கொள்ளாமல், பழைய துயரங்களை, கடந்த காலத்தை நினைத்து வருந்தாமல் புதிய வாழ்க்கை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்கிற தத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் நாம் கடந்த் வந்த இந்த ஓராண்டில் நமக்கு நிகழ்ந்த நன்மைகளுக்கு, நமக்கு நன்மை செய்தோருக்கு நாம் மனதார நன்றி நவிலும் நாளாகவும் இந்த நாள் அமைகிறது.

இந்த சாரம்சத்தோடே, போகிக்கு முன் வீட்டின் குப்பைகளை நீக்கி சுத்தம் செய்து, வெள்ளை அடித்தல் போன்ற சுத்திகரிக்கும் பழக்கத்தை நம் முன்னோர் கடைப்பிடித்து வந்தனர். அதாவது மனதில் இருக்ககூடிய தீய நினைவுகளை, அழித்து புத்துயிர் பாய்ச்சி புது வாழ்விற்கு நாம் தயாராக வேண்டும் என்பதே இதன் சாரம். இதனாலேயே இந்த நாள் முடிந்து புதிதாக தை பிறக்கையில், தை பிறந்தால் வழி பிறக்கும் என்றதும் இதனால் தான்.

தேவையில்லா பழக்கங்கள், தவறான எண்ணங்கள், தீயோர் உடனான நட்பு, தவறான செய்கை போன்ற அறத்திற்கும், நம் நல்வாழ்விற்கும் தீங்கானவற்றை   “ருத்ர கீதை ஞான யக்ஞம் “  எனும் புனித தீயில் இட்டு பொசுக்கி வெளிப்புறத்தில் நிகழ்வதை போன்ற சுத்திகரிப்பு நம் உள்நிலையிலும் நிகழ வேண்டும் என்பதையே இது குறிக்கிறது.

பஞ்சாப் போன்ற வட மாநிலத்தில் இந்த நாளினை அறுவடை நாளாக கொன்டாடி மகிழ்கின்றனர். இந்நாளில் தெய்வத்திற்கு அறுவடை செய்த விளை பொருட்களை படைத்து வழிபடுகின்றனர். வெவ்வேறு பெயர்கள் என்றாலும், இது நம் தேசத்தின் பண்டிகை. ஒற்றுமையின் பண்டிகை. நலமும் வளமும் அனைவரும் பொங்கி பெருக வேண்டும் என்கிற எண்ணத்தின் தொடக்கத்தில் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

கதிர் நியூஸ் வாசகர்கள் அனைவருக்கும் போகி திருநாள் நல்வாழ்த்துகள்!

Similar News