விபூதிக்கு இணையாக சந்தனம் கருதப்படுவது ஏன்?நெற்றியில் அணிவதால் ஏற்படும் நன்மை
நெற்றியில் அணிந்து கொள்ளும் புனித பொருட்களான திருநீறு, குங்குமம், சந்தனம் போன்றவைகளுக்கென்று ஆன்மீக குண நலன்களும், ஆயுர்வேத குணநலன்களும் உண்டு. திருநீறும், குங்குமமும் அனைத்து கோவில்களிலும் பொதுவாக வழங்கப்படுவது. சந்தனம் ஒரு சில குறிப்பிட்ட கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படும்.
ஆன்மீக சார்ந்த பல காரணங்கள் இதற்கு பின் இருந்தாலும், சந்தனம் அணிந்து கொள்வதால் ஏற்படும் பல அறிவியல் நன்மைகள் குறித்து இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.
சந்தனம் என்பது ஆக்னா சக்கரம், மற்றும் விசுதி சக்கரம் எனும் தொண்டை பகுதியில் பூசுவதால் பலவிதமான குணநலன்கள் ஏற்படுகின்றன. முக்கியமாக, இதனை ஆக்ஞா சக்கரத்தில் அணிந்து கொள்வதால் கவனக்குவிப்பும் விழிப்புத் தன்மையும் அதிகரிக்கிறது. நம்முடைய விழிப்பு நிலையை தூண்டுவதில் சந்தனத்திற்கு அதிக பங்கு உண்டு. உடலுக்கும், மனதிற்கும் ஒரு சேர நன்மையை வழங்கும் ஒரு அற்புத அம்சம் சந்தனம்.
சீனாவில் உள்ள அக்குபிரசர் அறிவியல் முறையில், புருவ மத்தி என்பது நரம்புகள் ஒருங்கே இணைகிற இடமாக கருதப்படுகிறது. இந்த இடத்தில் சந்தனத்தை வைத்து மெல்ல அழுத்தி விடுவதால் தலை வலி போன்ற உபாதைகளிலிருந்து விடுதலை கிடைப்பதாக நம்பப்படுகிறது . எனவே புருவ மத்தியில் சந்தனம் வைத்து கொள்வது குளிர்ச்சியான தன்மையை உடலினுள் பரப்பி நரம்புகளை சமநிலையுடன் வைஹ்து கொள்ள உதவுகிறது.
மேலும் நம்முடைய புருவ மத்தி என்பது வெளிப்புறத்தில் இருக்க கூடிய ஆற்றலை ஈர்க்கும் மையமாக கருதப்படுகிறது. ஆழ்மனதினை கட்டுப்படுத்தும் மையம் என்று கூட சொல்லலாம். சில உளவியல் நிபுணர்களிடம் மன அழுத்த ஆலோசனைக்கு செல்லும் பொழுது நாம் கவனித்திருக்கலாம். கைகளை புருவ மத்தியில் வைத்து ஒருவரின் கவனத்தை ஒருமுகப்படுத்துவார்கள். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் சந்தனம் வைப்பதால் தீய சக்திகள் நம் புருவ மத்தி நடுவே நமக்குள் பாய்வது தடுக்கப்படுகிறது.