தும்மல் வந்தால் "தீர்காயுள்"' என்பது ஏன்? அதன் மூலம் சகுனம் பார்ப்பது சரியா?
தும்மல் என்பது உடல் உபாதைகளுள் ஒன்று, ஒருவித விசித்திரமான ஒலியுடன் கூடிய உடல் உபாதையின் வெளிபாடு என்றாலும். நம் மரபில் தும்புகிற போது “தீர்காயுள் “ என்று பெரியவர்கள் வாழ்த்துவார்கள். அதுமட்டுமின்றி எந்த தலைப்பை குறித்து பேசிக்கொண்டிருக்கிறோமோ அப்போது தும்மல் ஒலி கேட்டால் அதை சத்தியம் என்று ஊர்ஜிதப்படுத்துவார்கள். தும்மலுக்கு ஆன்மீக ரீதியான முக்கியத்துவம் உண்டா என்கிற கேள்வி நம்மிடம் எழுகிறது.
பல தலைமுறைகளுக்கு முன்பு போதிய மருத்துவ வசதி இல்லாத கால கட்டங்களில் வீட்டை விட்டு வெளியே செல்கிற போது ஒருவர் தும்பினால் அப்போதைய சுற்றுசூழல் ஏதோ சரியில்லை என்பது அறிகுறி. அப்படியே உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும், வீட்டிலிருந்து வெளியேறுகிற போது தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்காத சூழல் என்பதால். சிறிது நேரம் அமர்ந்து விட்டு பின் செல்லுங்கள், அல்லது தீர்காயுள் கிடைக்கட்டும் என்று ஆசி வழங்குவது ஒரு மரபாக இருந்தது. அந்த பழக்கமே மருவி இன்று வரை வந்துள்ளது என்கிற கூற்றும் உண்டு.
தும்மலின் போது நல்ல சகுனம் கெட்ட சகுனம் பார்க்கும் பழக்கம் நம் மரபில் மட்டுமின்றி, கிரேக்க, ஐரோப்பிய நாடுகளில் கூட இருக்கிறது. அதாவது தும்மல் ஏற்படும் போது உடல் ஒரு ஷணம் ஸ்தம்பிக்கிறது. அதாவது நம் மொத்த உடல் உறுப்புகளும் ஒரு நுட்பமான நொடி ஸ்தம்பித்து பின் இயங்குகிறது என்கின்றனர். அந்த சமயத்தில் ஒருவருக்கு நேர்மறையான வாழ்த்து பரிமாற்றம் தேவை என்பதால் “தீர்காயுள் “என்று ஆசி வழங்கும் பழக்கம் ஏற்பட்டது என்றும் சொல்கின்றனர்.
ஶ்ரீ சின்மய் சுவாமிகளிடம் இதுகுறித்து கேட்கப்பட்ட போது, அவர் அளித்த பதில் யாதெனில், தும்மல் என்பது நமக்கு இரு வழிகளில் செய்திகளை உணர்த்துகிறது. தும்மல் என்பது ஒரு வகை அங்கீகாரம். மனம் எதைக்குறித்து நினைத்து கொண்டிருக்கிறதோ அப்போது தும்மல் ஏற்பட்டால் ( சளி தொந்தரவு, உடல் உபாதை போன்றவை இல்லாத போது) நாம் எதிர்பாராத வேளையில் ஏற்பட்டால் நாம் நினைப்பதை தொடரலாம் என்கிற அங்கீகாரமாக அதை ஏற்றுக்கொள்ளலாம் என்கிறார்.
மற்றொன்று தும்மலும் விக்கலும் எந்தவித உடல் உபாதை அறிகுறிகளும் இன்றி ஒருவருக்கு ஏற்படுகிறது எனில், அப்போது யாரோ நம்மை ஆத்ம ரீதியாக நினைக்கிறார்கள். அவர்கள் நினைப்பதன் வெளிப்பாடு நம் உடலில் வெளிப்படுகிறது என்று பொருள் என்கிறார்.
ஆன்மீக முக்கியத்துவம் உணர்ந்து நடக்கும் அதே வேளையில், இந்த நோய் தொற்று காலத்தைல் எதையும் அலட்சியமாக கருதாமல், பாதுகாப்போடு இருப்போம்.