நம் மரபில் ஒவ்வொரு சிறு சடங்குகளும் சம்பிர்தாயங்களும் காரண காரியத்தோடே உருவாக்கப்பட்டது . அவ்வகையில் பெண்கள் தங்கள் கையில் மருதாணி அணிந்து கொள்வது என்பது வெறும் அலங்காரத்திற்காக மட்டுமல்ல. அந்த மருதாணிக்கு பின் ஆச்சர்யமூட்டும் அறிவியல் நன்மைகளும் ஆன்மீக முக்கியத்துவமும் உள்ளது.
மருதாணி அணிந்து கொள்வது எத்தனை நல்லதோ அதை போலவே, மருதாணி மரம் வளர்ப்பதும் மிகவும் சிறப்பானது என கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி மகாலட்சுமியின் அம்சமான மருதாணியை வீட்டின் முன் வளர்த்து வர சகல விதமான ஐஸ்வர்ய பாக்கியமும் கிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் மருதாணி என்பது சுக்கிரனின் அம்சமாக கருதப்படுகிறது.
அறிவியல் ரீதியாக பார்த்தால் மருதாணி மிகச்சிறந்த கிருமி நாசினியாகும். இதனை அணிந்து கொள்வதால் உடல் சூடு தனியும் மற்றும் நகக்கண்ணில் உள்ள அழுக்கு கிருமி ஆகியவை நீங்கும். மேலும் மருதாணி அணிபவருக்கு அது சிவக்க கூடிய நிறத்தை வைத்தே அவர்களின் உடல் நிலையை இயற்கை வைத்தியத்தில் கணிக்க முடியும். அடர் சிவப்பாகவோ அல்லது மிகவும் கருப்பாகவோ சிவந்தால் அவர்களுக்கு உடலில் பித்தம் அதிகம் எனவும் சொல்வதுண்டு. இது போல அது சிவக்கும் தன்மைகேற்ப ஒருவரின் உடல்நிலை இருக்கும் என்பது நம்பிக்கை.
மேலும் இதனை இளம் நரை உள்ளவர்கள் இயற்கை சாயமாக இதனை அரைத்து பூசுவது இன்றைய காலத்தில் வழக்கமாகி வருகிறது. அடிப்படையில் மருதாணி தலைமுடிக்கு நல்ல ஊட்டசத்தை தரக்கூடியது.
இவையனைத்திற்கும் மேலாக மருதாணி குறித்து சொல்லப்படும் புராண கதை யாதெனில், ராவணனை வதைத்து சீதையை மீட்ட போது சீதாபிராட்டி ராமரிடம், நான் இங்கிருந்து அவதியுற்ற போது என் கவலைகள் அனைத்திற்கும் செவி கொடுத்தது இந்த மருதாணி செடி தான். நான் இதற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று சொல்லி என்ன வரம் வேண்டும் கேள் என சீதாபிராட்டி மருதாணியிடம் கேட்டார்.
அதற்கு மருதாணி செடி, அனைத்து பெண்களும் இன்புற்று இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம் என தெரிவித்த அந்த பரிசுத்தமான மனதை கண்டு உன்னை அணிபவருக்கு அனைத்துவிதமான சுபிக்ஷங்களும் கிடைக்கும் என வரமளித்தார். அதனாலேயே இன்றும் திருமணத்திற்கு முன்பாகவும், மற்ற நல்ல சுபகாரியங்களின் போதும் பெண்கள் மருதாணி அணிவதை ஒரு சடங்காக வைத்திருக்கின்றனர்.