கடவுளர்கள் தாமரை மீது நின்ற அல்லது அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருவது ஏன் ?
இறைவனை கோவிலில் தரிசப்பதை தவிர, தியானத்திலோ அல்லது தீவிர பக்தியிலோ மனதில் தரிசிக்கலாம். இவற்றை தவிர்த்து கடவுளர்களை திருவுருவப்படங்கள் மற்றும் திருவுருவச்சிலையின் மூலம் வழிபடுவது வழக்கம். இந்து மரபில் பெரும்பாலான தெய்வங்களிடம் ஒரு பொதுவான அம்சத்தை நாம் கவனிக்க முடியும். அது தாமரை மலருடன் தொடர்புடையது ஆகும்.
அதாவது பெரும்பாலான தெய்வங்கள் தாமரை மலரின் மீது நின்றிருப்பதை போலவோ, அமர்ந்திருப்பதை போலவோ அல்லது கைகளில் ஏந்தியிருப்பதையோ நாம் காண முடியும். இத்தனை தெய்வீகத்தன்மை தாமரை மலருக்கு இருப்பதற்கான காரணம் என்ன? மஹா விஷ்ணு அவர் கரங்களில் தாமரையை ஏந்தியிருப்பதை நாம் காண முடியும். அவருடைய தொப்புள் கொடியிலிருந்து தாமரை மலர்வதையும் அதில் பிரம்ம தேவர் அமர்ந்திருப்பதும் கண் கொள்ளா காட்சி.
தாமரை மலர் என்பது பரிசுத்தத்தின் அடையாளம். அசுத்தம் நிறைந்த பகுதியிலும் தன்னுடைய பரிசுத்தத்தை நிலைநிறுத்தும் தன்மை தாமரைக்கு உண்டு. சேற்றில் வளர்ந்தாலும் செந்தாமரை என்பார்கள். அதை போலவே தன்னுடைய சுற்று சூழல் எப்படியிருந்தாலும் தன்னுடைய தன்மையை, பண்பை விட்டுக்கொடுக்காத ஆச்சர்ய பண்பு தாமரைக்கு உண்டு. மேலும் தன்னுடைய மூலாதாரம் தண்ணீர் என்றாலும். அந்த தண்ணீருடன் ஒட்டாத அந்த பண்பு ஆன்மீகத்தில் ஆழங்கால் பட்டவர்களுக்கு மட்டுமே வாய்க்கும் நிலை.
இந்த லெளகீக வாழ்வு நமக்கு வாய்த்திருந்தாலும், அதிலிருக்கும் கடமைகளை நாம் செய்கிற போது அங்குள்ள சுகம், செளகரியம், உறவுகளுடன் நாம் அதீத பற்று கொள்ள கூடாது. வாழும் இடம் தண்ணீராகவே இருந்தாலும் எவ்வாறு அதிலிருந்து ஒட்டாமல் தாமரை தனித்து வாழ்கிறதோ. அவ்வாறே இந்த உலக வாழ்விலிருந்து பற்றற்று நாம் விலகியிருத்தல் வேண்டும் என்பதை தாமரை உணர்த்துகிறது.
தாமரையின் மொட்டு மலராக மலர்வது பார்ப்பதற்கு பேரானந்தத்தை தரக்கூடியதாகும். ஒவ்வொரு படிநிலையாக அதன் மலர்தல் வளர்வதை போலவே ஒருவர் ஆன்மீக பாதையில் முக்தியை நோக்கி செல்கிறார். எனவே அதன் தன் செயல்களின் மூலம் புனிதத்தையும், தன் வாழ்தலின் மூலம் வாழ்வின் நிதர்சனத்தையும் மற்றும் பற்றற்று வாழும் முறையையும் இந்த தாமரை நமக்கு உணர்த்துகிறது.
மேலும் தாமரை மலர் இலட்சுமி தேவியை குறிப்பதாகும். அது செளபாக்கியத்தின் அம்சம். தாமரைக்கு பத்மம் என்ற பெயர் உண்டு. அதனாலேயே மஹா விஷ்ணுவை பத்மநாபன் என்றும் அன்னை இலட்சுமி தேவியை பத்மாவதி என்றும் அழைக்கின்றனர்.
Image : Flipkart