வழிபாட்டின் போது ஆரத்தி சுற்றுவது ஏன்? ஆச்சர்யமூட்டும் அறிவியல் காரணம் !
ஒவ்வொரு சடங்கின் முடிவிலும் ஆரத்தி சுற்றுவது வழக்கம். மற்றும் ஒரு விருந்தினரை வரவேற்க அல்லது புனிதமான பெரும் அறிஞர்களை, ஞானிகளுக்கு மரியாதை செலுத்த ஆரத்தி சுற்றுவோம். அத்தனை ஏன், மருத்துவமனையிலிருந்து யாரேனும் சிகிச்சை முடிந்து திரும்பினால் கூட ஆரத்தி சுற்றுவோம். வழிபாடு தொடங்கி சடங்கு வரை, ஆரத்தி சுற்றுதல் என்பது மிகவும் முக்கியமான சடங்காக கருதப்படுகிறது.
ஆரத்தி சுற்றுகிற போது, பாடல்கள் பாடுவது, பஜனை, ஆர்ச்சனை ஆகியவையும் நிகழ்த்துவது வழக்கம். அதாவது இறைவனுக்கான பூஜையை முறைப்படி செய்வதற்கு 16 வகையான படிநிலைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இதனை சமஸ்கிருதத்தில் சதோஷ உபச்சாரா என்பார்கள். அந்த 16 படிநிலைகளில் ஒன்றாக, மிக முக்கியமானதாக இந்த ஆரத்தி இருக்கிறது. அதாவது தீபமேற்றி ஆரத்தி பீடத்தை வலக்கையில் வைத்து வலதுபுறமாக சுற்றுகிற போது அந்த ஒளியின் கீற்று இறைவனின் உருவம் முழுவதையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
வெளிச்சம் பரவுகிற போது கிடைக்கும் தெய்வீக தரிசனத்தின் மூலம் இறைவனின் பரம தரிசனத்தை நாம் பெற முடிகிறது. அதை போலவே ஆரத்தியின் முடிவில் அந்த தீபவொளியை கண்களில் ஒற்றுவதும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
இதன் தார்பரியம் யாதெனில், கருவறையில் இருக்கும் இறைவனை ஒவ்வொரு அங்குலமாக தரிசிக்கும் ஏக்கம் பக்தர்களுக்கு இருக்கும். ஆரத்தியின் மூலம் ஒவ்வொரு பாகமும் உள்ளடங்கும் போது ஒவ்வொரு ஷணமும் இறையின் தரிசனத்தை நாம் பெறமுடிகிறது. கற்பூரம் என்பது எவ்வாறு தன்னை தானே எரித்து கொண்டு அந்த இடத்திற்கு ஒளியூட்டுகிறதோ அவ்வாறே ஒருவர் தன்னிடம் இருக்கும் அதர்மங்களை, அகங்காரத்தை அழித்து கொள்கிற போது புதிய ஒளியுடன் இறையை தரிசிக்க முடியும் என்கிற தார்பரியம் இதன் மூலம் உணர்த்தப்படுகிறது.
தீப ஆரத்தி, கற்பூர ஆரத்தி, தீபத்திலும் பல முக ஆரத்தி என ஆரத்தியில் பல வகை உண்டு. நம் சாஸ்திரத்தில் ஒவ்வொரு ஆரத்திக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு. அறிவியல் ரீதியாக சொல்லப்படுவது யாதெனில். நெருப்பு கொண்டு நாம் காற்றை அல்லது சுற்றுச்சூழலை சுத்திகரிக்க முடியும். காற்றில் உள்ள கண்ணுக்கு தெரியாத கிருமிகளை நாம் அழிக்க முடியும். எனவே ஆரத்தி செய்வதால் அந்த இடம் அறிவியல் ரீதியாக சுத்திகரிக்கப்படுகிறது.
Image : Unspash