துர்கை அம்மனுக்கு எலும்பிச்சை மாலை அர்பணித்து வணங்குவது ஏன்? அதிசய தகவல்
காளியம்மன் அல்லது துர்கையம்மன் வழிபாடு செய்பவரின் கர்ம வினைகள் பரிதி முன் உள்ள பணியை போல விலகும் என்பது நம்பிக்கை. செவ்வாய் கிழமைகளில் துர்கையம்மனை வழிபாடு செய்வது மிகவும் உகந்ததாகும். செவ்வாய் கிழமை இராகு காலத்தில் வழிபடுபவருக்கு துன்பங்கள் தீரும் என்பது நம்பிக்கை. மஹாபாரத குறிப்பின் படி துர்கையம்மன் என்பவள் நம் துன்பங்களிலிருந்து, துயரங்களிலிருந்து நமக்கு விடுதலை அளிப்பவள்.
நவகிரகங்களிலேயே இராகு துர்கையம்மன் மீது மிகுந்த பக்தி கொண்டவர். மற்றும் பலம் மிக்க நவகிரகங்களுள் ஒருவராக திகழ்கிறார். இதனால் தான் சித்த புருஷர்கள் துர்கையம்மனை இராகு காலத்தில் வழிபட சொன்னார்கள். நாம் இவ்வாறு செய்கிற போது நாம் இராகுவையும் துர்கையையும் சேர்த்தே வணங்குகிறோம். இதன் மூலம் இருவரின் அருள் பார்வையும் நமக்கு கிடைக்கும்.
திருமண தடை, குழந்தை வரம், பொருளாதார மேம்பாடு என என்ன தேவையோ அனைத்தும் துர்கை வழிபாட்டில் சாத்தியம். முன்பு சொன்னது போல செவ்வாய்கிழமைகளில் துர்கையம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். அதுவும் குறிப்பாக எலும்பிச்சையில் விளக்கேற்றி, எலும்பிச்சை பழ மாலை அணிவிப்பது வழக்கம். ஏன் எலும்பிச்சை அன்னைக்கு உகந்தது?
எலும்பிச்சை மாலையை சமஸ்கிருதத்தில் நிம்பு பலா என்கிறார்கள். புராணங்களின் படி, நிம்பு அசுரா என்று ஒரு அரக்கன் இருந்தான். உலகில் இருப்பவர்களுக்கு பெரும் இடைஞ்சல் கொடுத்து வந்தான். அப்போது அகஸ்திய முனி கடும் தவமிருந்து அம்மனிடம் இந்த அரக்கனை வதைக்க சொன்னார். அவர் தவத்திற்கு இணங்கி அந்த அசுரனை வதைத்தார். சாகும் நேரத்தில் அந்த அரக்கன் தன் தவறை உணர்ந்தவனாக, எப்போதும் அன்னையின் காலடியில் இருக்க வேண்டும் என்று வேண்டினான். அவன் கோரிக்கையை ஏற்று அவனை மாலையாக அணிந்து கொள்ள தேவி அனுமதித்தார் என்பது வரலாறு.
இந்த துர்கைக்கு பான சங்கரி என்ற பெயரும் உண்டு. இந்த வடிவை அவள் எடுத்த இடம் கர்நாடகாவின் பாதமி பகுதியாகும். அம்பிக்கைக்கு 16, 21, 54, 108 என்ற எண்ணிக்கையில் மாலை கோர்த்து போடுவது வழக்கம். மேலும் எலும்பிச்சை என்பது நேர்மறை ஆற்றலின் மூலம் அதற்கு தீமையை ஈர்த்து நன்மையை வெளிப்படுத்தும் தன்மையிருப்பதும் ஒரு காரணம்.