தீர்த்தக்குளத்தில் நாணயம் போடுவதேன்?முன்னோர்களின் வியக்கவைக்கும் அறிவு!

Update: 2021-03-11 00:00 GMT

"கோவில் குளத்துக்கு போகனும் "என்பது வழக்கமான ஒரு சொல்லாடல். அதாவது கோவிலையும் குளத்தையும் இரண்டையும் புனிதமான ஸ்தலமாகவே நம் முன்னோர்கள் கருதினர். குளமிருக்கும் கோவில்கள் அதிகமான முக்கியத்துவம் பெற்றதும் இதனாலே. வீதியில் உலா வரும் உற்சவருக்கு எத்தனை வரவேற்பும், பயபக்தியும் பக்தர்கள் மனதில் எழுகிறதோ அதற்கு நிகரான பக்தியும் முக்கியத்துவமும் தெப்ப தேரில் வலம் வரும் உற்சவருக்கும் உண்டு.



இதன் அனைத்தின் மூலமும் குளங்களின் முக்கியத்துவத்தை நம்மால் உணர முடிகிறது. இதில் விளையாட்டாக பலர் குளங்களில் நாணயங்களை வீசுவதை பார்க்க முடியும். நீர் சற்று தெளிந்திருக்குமெனில் குளத்தில் குவிந்திருக்கும் எண்ணற்ற நாணயங்களை ஒருவரால் காண முடியும்.

இதை ஏதோ விளையாட்டாக செய்வதாக சிலர் நினைக்கின்றனர், சிலரோ பல காலமாக பின்பற்ற படும் சடங்காக நினைத்து இதனை செய்து வருகின்றனர். இதன் உண்மை தார்பரியத்தை அறிய முற்படுகையில் பலரும் மேலோட்டமான அர்த்தங்களை புரிந்து கொள்கின்றனர்.


அதாவது, குளத்தை சுத்தம் செய்கையிலேயே அல்லது தூர்வாருகையிலோ ஏழை எளிய மக்களுக்கு இந்த நாணயம் உதவியாக இருக்கும் என்று நினைக்கின்றனர்.

இது மேலோட்டமான சிந்தனை. உண்மையில் இதனை ஆன்மீக ரீதியிலும் அறிவியல் ரீதியிலும் ஆராய்ந்தால், முன்னொரு காலத்தில் நாணயங்கள் செம்பு உலோகத்தில் செய்யப்பட்டன. இன்றைய நவீன யுகத்தில் நாம் மரபுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கும் வேளையில் செம்பால் ஆன பாத்திரங்களின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. அதனாலேயே செம்பு பாத்திரத்தில் நீர் அருந்துவது, செம்பால் ஆன தண்ணீர் பாட்டில்களின் விலை மிகவும் அதிகமானதாக இருக்கிறது. காரணம் செம்பு பொருட்களை  நீர் அருந்த பயனபடுத்துவது மிகவும் மகத்துவமானதாக கருதப்பட்டது. எனவே இந்த செம்பு நாணயங்களை குளத்தில் வீசுகிற போது அந்த செம்பின் ஆற்றல் நீருக்கு பாய்ச்சப்பட்டு, நீரின் சக்தி நிலையை உயர்த்த உதவியது. அதனாலேயே குளங்களில் நாணயம் வீசப்பட்டு வந்தன.

மேலும் குழந்தையில்லாதோர் இந்த குளங்களில் அந்த காலத்தில் மூழ்கி எழுவதால் அவர்களின் ஆற்றல் நிலை உயர்ந்ததாகவும் சொல்லபடுகிறது. நம் இந்து மரபில் செய்யப்படும் எந்தவொரு செயலும் விளையாட்டோ, வெறும் சடங்கோ அல்ல ஒவ்வொன்றிற்கும் ஆழமான அர்த்தம் உண்டு என்று எடுத்து இயம்புகின்றனர் ஆன்மீக சான்றோர்.

Tags:    

Similar News