நந்தியின் ஒரு காதை மூடி ஒரு காதில் வேண்டுதல் சொல்வது ஏன்?
நந்தியின் ஒரு காதை மூடி ஒரு காதில் வேண்டுதல் சொல்வது ஏன்?
சிவன் அனைத்தை விடவும் வலிமையானவர். சிவன் அனைத்து இடங்களிலும் இருக்க கூடியவர். மற்றும் சிவன் அனைத்தையும் அறிந்து கடந்தவர். மஹாதேவா என சிவனை அழைக்க காரணம், அவர் தேவருக்கெல்லாம் தேவர். சாஸ்திரங்கள் மட்டும் புராணங்களில் சொல்லப்படும் அனைத்து அம்சங்களின் பின்னும் ஆழந்த ஆன்மீக அர்த்தம் உண்டு.
குறிப்பாக சிவன் என்பவர் இந்த மொத்த பிரபஞ்சத்தின் அடையாளம். சிவபெருமான் இந்த உலக சிருஷ்டியை நிகழ்த்துவதற்காக, தன்னையே மூன்று வடிவாக உருமாற்றி கொண்டார். அதில் முதலாமவர் பிரம்ம தேவர். அவர் இந்த உலகத்தை உருவாக்குபவர். அடுத்து மஹா விஷ்ணு இவர் இந்த உலகத்தை காப்பவர். அடுத்து சிவபெருமான் இவர் அழிக்கும் பங்கினை செய்பவர்.
சிவபெருமானை வழிபடுகையில் அங்கே தவறாமல் இடம் பெற்றிருப்பவர் நந்தி பெருமான். சிவ லிங்கம் என்பது மொத்த பிரபஞ்சத்தின் அடையாளமாகவும் அவர் முன் நிற்கும் நந்தி தனித்த உயிரினத்தின் ஆன்மாவின் குறியீடு எனவும் சொல்லப்படுகிறது. நந்தி என்பது ஸ்திரத்தன்மையின் குறியீடு. அதனுடைய நான்கு கால்கள், சத்தியம், தர்மம், அமைதி, மற்றும் அன்பை குறிப்பதாக உள்ளது.
யார் ஒருவர் முக்தி எனும் பாதையை நோக்கி செல்கிறார்களோ அவர்களுக்கு ஞானோதயம் என்பதே பிறப்பின் நோக்கமாக அமையும். எனவே சிவபெருமானின் முன்பு நந்தி தேவன் அமர்ந்திருப்பது, படைப்பில் அனைவரும் சமம் என்பதையும், ஒரு தனி உயிர் எவ்வாறு தெய்வீகத்துடன் தொடர்பில் இருப்பது என்பதையும் குறிக்கும் விதமாய் அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி, நந்தி என்பது ஏற்புத்தன்மையின் குறியீடும் ஆகும்.
கடவுள் நமக்கு நல்கும் ஆசி மற்றும் ஆற்றலை நாம் ஏற்றுக் கொள்ளும் தன்மையுடன் அவரை தரிசிக்க வேண்டும் என்பதையும் நந்தி உணர்த்துகிறது. சைவ மரபில் நந்தி தேவனுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. உதாரணமாக குருவே சிவன் என கூறினன் நந்தி என்று ஒரு பாடல் உண்டு. குருவை சிவனாக வழிபடும் முறையை நமக்கு நந்தி உணர்த்தியிருப்பதை சொல்லும் இடம்.
மேலும் நந்தி பகவான் இடத்தில் வைக்கும் வேண்டுகோள்களை அவர் ஏற்று கொள்வார் எனவும் சொல்லப்படுகிறது. அதனாலேயே கோவில்களில் நந்தியின் ஒரு காதை மூடி மறு காதில் சில கோரிக்கைகள் சொல்லப்படுவதை நம்மால் காண முடியும்.