சனிபகவானை நேருக்கு நேர் நின்று வணங்கலாமா? என்ன சொல்கிறது புராணம்!

Update: 2021-04-06 00:30 GMT

பல வித தெய்வ வழிபாடுகளை கொண்ட நம் இந்து மரபில் சனி பகவானை வழிபடுவது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. காரணம் குலதெய்வம் அல்லாத கடவுள்களில் மிக முக்கியமானவராக இவர் இருக்கிறார். இவரை வழிபடாத பக்தர்களே இல்லை எனலாம். ஜோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள எவரும் இவரை வழிபடாமல் இருக்கவே முடியாது.


இவருக்கான கோவில்கள் குறைவு என்றபோதும். இவர் கோவில் கொண்டிருக்கும் ஒரு சில இடங்கள் மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம் ஜாதகத்தில் உள்ள தோஷங்கள், கிரகங்களில் பிரச்சனை, சனி பெயர்ச்சி போன்ற காலகட்டத்தில் இவரை வணங்குவதே தக்க பரிகாரமாக சொல்லபட்டுள்ளது. அதன் அடிப்படையில் நாம் செல்லும் சனி பெருமான் ஆலயங்களில் ஒரு வித விநோதமான வழிபாட்டு முறையை நம்மில் பலர் கவனித்திருக்க கூடும்.

அதாவது, சனி பகவானை வணங்குகிற போது நேருக்கு நேராக நின்று வணங்காமல், ஒருபுறமாக ஓரமாக நின்று வணங்குவார்கள். ஏன் இவ்வாறு வணங்குகிறார்கள்? ஏன் சனி பெருமானை நேருக்கு நேர் நின்று வணங்க கூடாது?


நவகிரகங்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு தன்மை உண்டு. ஒவ்வொரு விதமான பலம் உண்டு. அதன் அடிப்படையில் சனிகிரகம் இயல்பாகவே அசுப பலனை தரக்கூடியதை. எனவே சனி பகவானை நேருக்கு நேர் கண்டால் அசுபம் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு என்பதாலேயே சனி பகவானை நேருக்கு நேர் நின்று வழிபடாமல் அவருக்கு ஓரமாக நின்று வணங்கும் முறை இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மேலும் உக்கிரமான தெய்வங்களை நேருக்கு நேர் சந்திக்கிற போது அவர்களின் பார்வையின் தீவிரத்தை தாங்கும் வல்லமை நம்முடைய ஸ்தூல உடலுக்கு இல்லாமல் போகலாம் என்பதும் ஒரு காரணம். இதனோடு சேர்த்து சனிபகவானை வணங்க மற்ற சில வழிகாட்டுதல்களும் சொல்லப்பட்டுள்ளன.

சனிபகவானை சூரிய உதயத்திற்கு முன்பும், சூரிய அஸ்தமனத்திற்கு பின்பும் வணங்குவது நல்ல பலனை தரும். அதாவது சனிபகவானுக்கும் அவர் தந்தையான சூரிய தேவனுக்கு இசைவு இல்லை என்பதால் சூரியனின் இருப்பு இல்லாத நேரத்தில் வணங்குவது நன்மை தரும் என சொல்லப்படுகிறது.

மேலும் சனிபகவானை வணங்குவதற்கு முன்பாக அனுமரை வணங்குவது மிகவும் சிறப்ப்புமிக்கதாகும். காரணம், அனுமரின் வார்த்தைகளை சனிபகவான் ஒரு போதும் மீற மாட்டார் என்பதால்.

Tags:    

Similar News