கல்வியின் அதிபதியாம் கலைவாணிக்கு அன்னப்பறவை வாகனமாக இருப்பது ஏன்?

Update: 2022-06-18 00:56 GMT

வழிபாட்டுக்குரிய தெய்வங்களாக ஏராளமான கடவுளர்கள் நம் மரபில் இருந்தாலும், மும்மூர்த்திகள் எப்போதும் சிறப்புக்குரியவர்கள். படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் தொழிலை செய்யக்கூடியவர்களாக முறையே பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோரை நாம் வழிபடுவதுண்டு. இதை போலவே தேவ் வழிபாட்டில் ஆதி பராசக்தியின் அம்சங்களான முப்பெரும் தேவிகளை நாம் வழிபடுவது வழக்கம்.

ஒரு மனிதனின் அன்றாட வாழ்வியலுக்கு தேவையான கல்வி, செல்வம் மற்றும் வீரம் இந்த மூன்றையும் அருளக்கூடியவர்களாக முறையே சரஸ்வதி, இலட்சுமி மற்றும் பராசக்தி ஆகிய தேவியர்களை நாம் வழிபடுவது வழக்கம். இந்த வழிபாட்டு அம்சங்களை நாம் இன்னும் உற்று நோக்கினால் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு தனித்துவமான அம்சமும், அந்த அம்சத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர்களின் நிறம், வாகனம், அவர்கள் சூடிக்கொண்ட பொருட்கள் ஆகியவை இருப்பதை காணலாம்.

நீல நிறத்தில் விஷ்ணு பரமாத்மா, திருநீறு பூசி சாம்பல் அணிந்து சிவபெருமான், ஆறு முகத்துடன் முருகப்பெருமான், துதிக்கை கொண்டு விநாயகபெருமான் என ஒவ்வொரு கடவுளருக்கும் ஒவ்வொரு தனித்துவமான அம்சமும், அந்த அம்சத்திற்கு தக்க காரணம் இருப்பதை நம்மால் அறிய முடிகிறது.

அந்த வகையில், பெரிய அளவில் கோவில்களும், சந்நிதிகளும் இல்லையென்ற போதும், தன்னுடைய இருப்பை எல்லா இடங்களிலிலும் வியாபித்து நிலை நிறுத்தியிருக்கும் சரஸ்வதி தேவி வெள்ளை நிறம் சூடி, அன்ன பறவையை வாகனமாக வைத்திருப்பது ஏன் ? என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

சரஸ்வதி தேவி, கல்வியின் அதிபதி. இங்கே கல்வி என்பதும் கற்றல் என்பதும் வெறும் பள்ளிக்கல்வி என்றளவில் புரிந்து கொள்ளப் படுகிறது. உண்மையில் பொருள் ரீதியான உலகிலிருந்து ஒருவர் பெறும் விடுதலையும், அந்த விடுதலைக்கு காரணமான ஞானத்தையும் வழங்கும் ஞான வாணி, சரஸ்வதி தேவி ஆவார்.

தூய ஞானத்தின் அடையாளமாகவே தூய்மையான வெள்ளை நிறத்தை சரஸ்வதி தேவி தனக்கு உகந்த நிறமாக சூடிக்கொண்டுள்ளார். அவருடைய வாகனமாக அன்னம் எதைக்குறிக்கிறது?

அன்னப்பறவைக்கு பாலையும் நீரையும் பிரிக்கும் குணம் உண்டு. ஒரு மனிதர் உலக வாழ்வின் இன்பங்களிலிருந்து தன்னை பிரித்து பார்க்க வேண்டும் என்கிற ஞானத்தை இது உணர்த்துவதாக உள்ளது. மேலும், அன்னத்தால் நீரில் தன் சிறகுகள் ஈரமாகத வண்ணம் சறுக்கி கொண்டு மேலெழும்பி பறக்கும் தன்மை உண்டு. இதை போலவே மனிதர்களும் இந்த பொருள் ரீதியான வாழ்வில் பட்டும் படாமலும், ஒருவேளை பட நேர்ந்தாலும் அந்த பொருள் ரீதியான அம்சத்தில் மூழ்கிவிடாமல் ஆன்மீக பாதையில் மேலெழும்பி செல்ல கூடிய தன்மையை அவர் அடைய வேண்டும் என்கிற மகா தத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.

Tags:    

Similar News