அகத்திய முனிவர் செய்த உலகின் முதல் கபால அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சை செய்வதற்கான எந்த கருவிகளோ உபகரணமோ இல்லாமல் மூலிகை மருத்துவத்தை மட்டுமே கொண்டு அகத்தியர் முதன்முதலாக செய்த அறுவை சிகிச்சை பற்றிய சுவாரஸ்ய தகவல்
ஒருமுறை மன்னர் காசி வர்மனுக்கு தீராத தலைவலி ஏற்பட்டது. எத்தனையோ வைத்தியர்கள் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. இந்த நிலையில் தான் அகத்தியர் தனது சீடர்களுடன் தோரண மலைப்பகுதியில் முகாமிட்டிருப்பதை அறிந்தார். உடனே அகத்தியரைச் சென்று சந்தித்தார். காசிவர்மன் மன்னரின் நாடியை பிடித்து பார்த்து " மன்னா உனது தலைவலி விசித்திரமானது . அந்த தலைவலிக்கு காரணம் ஒரு தேரை" என்றார். மன்னருக்கு மேலும் வியப்பு ஏற்பட அதோடு அச்சமும் தொற்றிக் கொண்டது. "என்ன சொல்கிறீர்கள் முனிவரே? என் தலைக்குள் எப்படி தேடி சென்றது?" என்று குழப்பத்துடன் வினா எழுப்பினர்.
ஒருமுறை வேட்டையாடச் சென்ற நீ வனத்தில் ஓய்வெடுத்த போது சிறிய தேரை ஒன்று உன் நாசி வழியாக தலைக்குள் புகுந்து விட்டது. அது தற்போது வளர்ந்த நிலையில் காணப்படுகிறது. அதனால்தான் உனக்கு இந்த தலைவலி. இந்த வலி நீங்குவதற்கு கபால அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார் அகத்தியர். அறுவை சிகிச்சை செய்ய அகத்தியர் தயாரான போது அவருக்கு உதவிகரமாக இருந்தவர் ராமதேவர். மூலிகை ஒன்றால் மன்னரை மயக்கம் அடையச் செய்த அகத்தியர் மன்னரின் தலையைப் பிளந்து அங்கு தேரை இருக்கும் இடத்தை கண்டுபிடித்தார். ஆனால் மூளைக்கோ, தலையில் உள்ள சிறு நரம்புகளுக்கோ எவ்வித பாதிப்பும் இன்றி தேரையை வெளியே எடுப்பது எப்படி என்று அகத்தியர் யோசித்தார்.
அப்போது ராமதேவர் , ஒரு சட்டியில் தண்ணீர் கொண்டு வந்து அதை மன்னரின் தலை அருகில் வைத்து ஒரு குச்சியால் தண்ணீரை அலசி சலசலவென சத்தம் வரும்படி செய்ததால் தண்ணீர் சத்தத்தை கேட்ட தேரை தாவிக் குதித்து வெளியேறி தண்ணீருக்குள் விழுந்தது. இதை அடுத்து 'சந்தான கரரணீ' என்ற மூலிகையைக் கொண்டு மன்னரின் பிளந்த தலையை அகத்தியர் ஒட்ட வைத்தார். மயக்கம் தெளிந்து எழுந்த மன்னர் தலைவலி குணமானதை உணர்ந்து அகத்தியருக்கு நன்றி தெரிவித்தார் . அறுவை சிகிச்சையின் போது சமயோஜிதமாக தண்ணீரை கொண்டு தேரையை வெளியேற்றியது ராமதேவன் தான் என்று பாராட்டிய அகத்தியர் அவருக்கு தேரையர் என்ற பட்டத்தையும் வழங்கினார். அதுவே ராமதேவரின் நிரந்தர பெயராக மாறிப்போனது.