திருமண தடை நீங்க தம்பதியருடன் காட்சி தரும் இந்த முருகனை தரிசியுங்கள்

அருள்மிகு சோலைமலை முருகன், பழமுதிர்சோலை

Update: 2023-01-25 00:30 GMT

 சோலைமலை முருகன் கோவில் மதுரையில் இருந்து வடப்புறத்தில் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு பழமுதிர் சோலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. அதுவே உலக பிரச்சித்தமும் கூட. முருக பெருமானின் அறுபடை வீடுகளுள் ஆறாவதாக வீடாக போற்றப்படும் திருத்தலம் இது. இந்த திருத்தலம், மதுரை அழகர் கோவிலுக்கு அருகில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.

பழமுதிர் சோலை என்பது அடர்ந்த வனப்பகுதி நிறைந்த மலை. வளமிக்க பழ மரங்கள், காய்கறிகள் வளர்ந்து செழிக்கும் இயற்கையின் கொடை. அதனாலேயே இந்த பகுதிக்கு சோலை மலை என்று பெயர். மேலும் இந்த பகுதியில் பழங்களும், காய்கறிகளும் உதிர்ந்து செழித்து கிடக்கும் என்பதால் பழமுதிர் சோலை என்ற திருப்பெயர் உண்டானது.

இந்த பெயர் நிலைத்து நிற்க காரணமாக இருக்கும் மற்றொரு புராணக்கதை யாதெனில், முருகப்பெருமான் மீது மிகுந்த அன்பு கொண்ட அவ்வை பாட்டி ஒருமுறை மதுரையை நோக்கி நடந்தார். அப்போது அவருக்கு களைப்பு ஏற்பட்டது. இதனால் இந்த சோலை மலை பகுதியில் இருந்த நாவல் மரத்தின் அடியில் களைப்பாறினார். அப்போது அவ்வைக்கு அருள் புரிய நினைத்த முருகன், மாட்டுக்கார சிறுவன வேடத்தில் வந்தார். மரத்தின் அடியில் அவ்வை களைப்பாற அமர்ந்திருக்க, மரத்தின் மேல் அமர்ந்திருந்த சிறுவன, அவ்வையை நோக்கி “களைப்பாக இருக்கிறீர்களே நாவல் பழம் வேண்டுமா?” என்றான். அக மகிழ்ந்த அவ்வை. “கொடு” என்றார். அதற்கு சிறுவன் “சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா” என்றார். பழத்தில் என்ன சுட்டபழம், சுடாத பழம் என புரியாத அவ்வை, “சரி சுட்ட பழமே கொடு” என்றார்.

மேலிருந்து மரத்தை உலுக்கு பழங்களை உதிர செய்தான் சிறுவன். கீழே உதிர்ந்த பழங்களை எடுத்த அவ்வை அதில் மண் ஒட்டியிருந்ததால், அதனை ஊதினார். அதற்கு முருகன் “என்ன பாட்டி, பழம் மிகவும் சுடுகிறதா?” என்றான். அவன் மதிநுட்பத்தை கண்ட அவ்வை வந்திருப்பது முருகப்பெருமான் என்று உணர்ந்தார். அவ்வைக்கு தன் அருள் தரிசனத்தை நல்கும் பொருட்டு பழத்தை உதிரசெய்து திருவிளையாடல் நிகழ்த்தியதால் இந்த தலம் பழமுதிர் சோலை என அழைக்கப்படுகிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீட்டில் கந்தப்பெருமான் தன் தம்பதியருடன் காட்சி தரும் ஒரே தலம் இது தான். மேலும் இக்கோவிலின் தல விருட்சமான நாவல் மரம், வழக்கத்திற்கு மாறாக கந்தனின் சஷ்டி மாதமான ஐப்பசியில் பழுக்கும் அதிசயம் இங்கே நிகழ்கிறது. மேலும் கந்த சஷ்டி விழா முடிந்ததும், இங்கே முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடத்தப்படுவது தனிச்சிறப்பு.

Tags:    

Similar News