கே.எல் ராகுலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து.!
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 23ம் தேதி புனே மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் டி-20 தொடரில் இடம்பெற்ற பல வீரர்கள் ஒருநாள் அணியிலும் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் டி-20 தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த கே.எல் ராகுல் தொடர்ந்து நான்கு போட்டிகளில் 14 ரன்கள் மட்டுமே அடித்தார்.
அந்தவகையில், கடைசி டி.20 போட்டிக்கான இந்திய அணியில் இருந்து கே.எல் ராகுல் நீக்கப்பட்டது குறித்து பேசிய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், இந்திய அணி கே.எல் ராகுலுக்கு இன்னும் ஒரு போட்டியில் மட்டுமாவது வாய்ப்பு கொடுத்து பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், "சரியாக ஆடாத வீரரை அணியிலிருந்து நீக்கி பென்ச்சில் உட்கார வைப்பது ஒருபோதும் தீர்வாகாது; கூடுதல் வாய்ப்பளிப்பதன் மூலம் மட்டுமே தீர்வு. போட்டியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு கூடுதலாக ஒரு பந்துவீச்சாளருடன் களமிறங்க வேண்டும் என இந்திய அணி எடுத்த முடிவை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் கே.எல் ராகுலுக்கு இன்னும் ஒரு போட்டியில் மட்டுமாவது வாய்ப்பு கொடுத்திருக்கலாம். எனவே ராகுலுக்கு ஒருநாள் போட்டிகளில் ஆட வாய்ப்பளிக்க வேண்டும் என்று கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.