இரண்டாவது ஒருநாள் போட்டியில் புதிய சாதனையை படைத்த வீராட் கோலி.!

Update: 2021-03-27 11:15 GMT

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, இந்திய அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது.இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.புனேவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கே.எல் ராகுல் 108 ரன்களும், ரிஷப் பண்ட் 77 ரன்களும், விராட் கோலி 66 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில் 35 ரன்களும் எடுத்து கை கொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 336 ரன்கள் எடுத்தது.


 இதனையடுத்து337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, பாரிஸ்டோவும், ஜேசன் ராயும் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.போட்டியின் முதல் சில ஓவர்களில் அடக்கி வாசித்த இந்த ஜோடி ஓவர்கள் செல்ல செல்ல தங்களின் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மளமளவென ரன் குவித்தது. நீண்ட நேரம் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தொல்லை கொடுத்த இந்த ஜோடியை ரோஹித் சர்மா, தனது துல்லியமான த்ரோ மூலம் ஜேசன் ராயை (55) ரன் அவுட்டாக்கி பிரித்தார். இங்கிலாந்து அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்திருந்தாலும், அரைசதம் அடித்து அசத்திய விராட் கோலி இந்த போட்டியின் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.


இரண்டாவதுஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த கேப்டன்கள் பட்டியலில் முன்னாள் வீரர் கிரேம் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி விராட் கோலி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் 8497 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார், தோனி 6641 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.அதே போல் மூன்றாவது இடத்தில் களமிறங்கி 10,000 ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலிலும் ரிக்கி பாண்டிங்கிற்கு அடுத்த இடத்தை விராட் கோலி பிடித்துள்ளார்.

Similar News